உலகம்

வங்கதேச வன்முறை: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச வன்முறை: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
Former Prime Minister Sheikh Hasina sentenced to death
மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் இன்று (நவம்பர் 17) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. திட்டமிட்ட படுகொலைகளுக்கு ஷேக் ஹசீனா மூளையாகச் செயல்பட்டதாகக் கூறி, அவர் செய்தது மனித குலத்திற்கே ஆபத்தானது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தீர்ப்பின் பின்னணி

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகப் பெரும் மாணவர் போராட்டம் வெடித்தது. இந்த வன்முறையில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், மேலும் பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். தொடர் போராட்டங்களால் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதன்பின்னர் அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

வழக்கு மற்றும் விசாரணை

வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். இடைக்கால அரசு அமைந்தவுடன், அரசுக்கு எதிராகப் போராடுவோரைச் சுட்டுக் கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அப்போதைய உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகப் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பல மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

மரண தண்டனை மற்றும் நீதிபதியின் கருத்து

இந்த வழக்கில், மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் மனித குலத்திற்கு எதிராக செய்த குற்றங்களுக்காக, ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஷேக் ஹசீனா, தன் சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய உத்தரவிட்டுள்ளார் என்றும், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.