உலகம்

டெல்லி கார் வெடிப்பு: "பயங்கரவாதம் நமது ஆன்மாவை அசைக்க முடியாது"- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

"பயங்கரவாதத் தாக்குதலினால் நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது" என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

டெல்லி கார் வெடிப்பு:
Israel PM Benjamin Netanyahu and India PM Modi
டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "பயங்கரவாதத் தாக்குதலினால் நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது" என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் மற்றும் விசாரணை நிலவரம்

டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்து என்.ஐ.ஏ.(தேசியப் புலனாய்வு முகமை) அதிகாரிகள் 10 பேர் கொண்ட ஒரு தனிக்குழுவை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் பிரதமரின் இரங்கல் அறிக்கை

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தும், இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அவர், "எங்கள் அன்பான நண்பர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நானும், இஸ்ரேல் மக்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சோகமான நேரத்தில் இந்தியாவுடன் இஸ்ரேல் துணையாக நிற்கிறது," என்று கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதி

அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவும் இஸ்ரேலும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள். பயங்கரவாதம் அதைத் தாக்கலாம். ஆனால், நமது ஆன்மாக்களை ஒருபோதும் அசைக்க முடியாது. நமது தேசங்களின் ஒளி நமது எதிரிகளின் இருளைப் போக்கும்," என்று பயங்கரவாத அச்சுறுத்தலை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்ளும் வலிமையைக் காட்டுவதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.