உலகம்

நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

நேபாளத்தில் நீடித்து வரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!
Heavy rains in Nepal
நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாக நீடித்து வரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (மட்டும் மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர்.

மீட்புப் பணிகள் தீவிரம்

நேபாள உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, நாட்டில் உள்ள 11 மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்குதல் காரணமாக, 15 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட கோஷி மாகாணத்தில் உள்ள இலாம் மாவட்டத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சத்தார் மாவட்டத்தில் 8 பேரும், உதய்பூர் மற்றும் ரௌதஹட் மாவட்டங்களில் தலா 3 பேரும், காவ்ரே மற்றும் கோட்டாங் மாவட்டங்களில் தலா 2 பேரும், சுன்சாரி, மோராங், மஹோத்தரி, சிந்துலி, மற்றும் சிந்துபால்சௌக் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் உள்ள ஏழு மாகாணங்களில், கோஷி, மாதேஷ், பாக்மதி, கண்டகி மற்றும் லும்பினி ஆகிய ஐந்து மாகாணங்களில் தென்மேற்குப் பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள இராணுவம், நேபாள காவல்துறை மற்றும் ஆயுதக் காவல்படை (APF) ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அரசு நிவாரண அறிவிப்பு

மழை தொடர்பான பேரழிவுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நேபாள ரூபாய்.2,00,000 (இரண்டு லட்சம்) நிவாரணமாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான நிதியுதவியைத் தவிர, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று தேசியப் பேரிடர் மற்றும் இடர் குறைப்பு மேலாண்மை ஆணையம் (NDRRMA) தெரிவித்துள்ளது.