இந்தியா

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த கேரள அரசு
தமிழகம் மற்றும் கேரள அரசுகள் இடையே முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நீடித்து வரும் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கேரள அரசு தற்போது பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், முல்லை பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு, புனரமைப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தாலும், அணையில் 152 அடி நீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால், கேரள அரசு செலவில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு தேவையான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து முடிவெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு முறையிட்டுள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் குழுவை மத்திய அரசு கலைத்தது சட்டவிரோதமானது என்றும் கேரள அரசு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பால் அமைக்கப்பட்ட இந்தக் குழுவை கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், ஜல்சக்தி அமைச்சகத்தின் அறிவிப்பு சட்டவிரோதமானது எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், கேரள அரசுக்கும் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், தற்போது கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது பல்வேறு பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு எடுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.