ஐபிஎல் 2025

IPL 2025: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. பஞ்சாப்பை பந்தாடிய Abhishek sharma..SRH அபார வெற்றி!

ஐபிஎல் 2025 டி20 லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

IPL 2025: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. பஞ்சாப்பை பந்தாடிய Abhishek sharma..SRH அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இண்டர்நேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா 36 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 42 ரன்னும் எடுத்தது அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து, வதேரா 27 ரன்னிலும், ஷஷாங் சிங் 2 ரன்னிலும், க்ளைன் மேக்ஸ்வெல் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி 36 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 82 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் 34 ரன்களும், மார்கோ ஜான்சன் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஐதராபாத் அணியில், அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரயாக ஆடிய இந்த ஜோடி ரன்களை குவிக்கத் தொடங்கியது. இதில், சிறப்பாக ஆடி வந்த டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக அபிஷேக் சர்மாவுடன், கிளாசன் ஜோடி சேர்ந்தார்.

தொடர்ந்து பஞ்சாப் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, வாணவேடிக்கை காட்டி வந்த அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 10 சிக்சர்கள், 14 பவுண்டரிகளுடன் 141 ரன்களில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முடிவில் இஷான் கிஷன் 9 ரன்களும், கிளாசன் 21 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில், ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றிபெற்றது. கடந்த சில போட்டிகளாக தொடர் தோல்விகளை சந்தித்துவந்த ஐதராபாத் அணி, இத அபார வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியில், 4 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ளது.