ஐபிஎல் 2025

15 வருடத்திற்கு பிறகு சேப்பாக்கத்தில் CSK-வை வீழ்த்தியது டெல்லி அணி..!

IPL 2025: சென்னை சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

15 வருடத்திற்கு பிறகு சேப்பாக்கத்தில் CSK-வை வீழ்த்தியது டெல்லி அணி..!
15 வருடத்திற்கு பிறகு சேப்பாக்கத்தில் CSK-வை வீழ்த்தியது டெல்லி அணி..!

ஐபிஎல் 2025 தொடரின் 17வது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி அக்சர் படேல் தலைமையிலும் களமிறங்கியது.

டெல்லி அணி பேட்டிங்

இன்றையபோட்டியில், டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்த சென்னை அணியின் வீரர்கள் பவுலிங் செய்ய களமிறங்கினர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுலும், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கும் களம் இறங்கினார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மெக்கர்க் டக் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய அபிசேக் போரல் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய கே.எல். ராகுல் 77 ரன்களில் பத்திரனா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் அக்சர் படேல் 21 ரன்னிலும், சமீர் ரிஸ்வி 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய அஸ்தோஷ் ஷர்மா 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய விப்ராஜ் நிகம் 1 ரன்னிலும், தொடர்ந்து ஸ்டப்ஸ் 24 ரன்களுடன் களத்தில் இருக்க 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி குவித்தது.

184 ரன்கள் இலக்கு

184 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வே களமிறங்கினர். கடந்த சில போட்டிகளில் நன்றாக விளையாடிய ரச்சின் இன்று 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ருத்துராஜ் களமிறங்கி அதிரடி காட்டுவார் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ருத்துராஜ் 5 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். மறுபுறம் கான்வே 13 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் ப்ளேயராக ஷிவம் துபே களமிறங்கினார். அவரும் 18 ரன்களில் ஆட்டமிழக்க சிஎஸ்கே 10 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து விஜய் சங்கர் நிதானமாக ஒரு பந்திற்கு ஒரு ரன்கள் வீதம் எடுத்து வந்தார். ஜடேஜாவும் தனது விக்கெட்டை இழந்த பிறகு தோனி களமிறங்கினார். இறுதியில் விஜய் சங்கர் மற்றும் தோனி ஜோடி சிஎஸ்கேவின் வெற்றிக்காக போராடியது. அடித்து ஆடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்றைய போட்டி ஏமாற்றமாக அமைந்தது. விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தோனி 26 பந்துகளில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தோல்வி குறித்து ருத்துராஜ்

கடைசி சில போட்டிகளில் நாங்கள் நினைத்ததைப் போல எதுவும் அமையவில்லை. பவர் பிளேயில் கோட்டை விடுகிறோம். ஒன்று பவுலிங்கில் 20 ரன்களுக்கு மேல் கொடுக்கிறோம்
அல்லது பேட்டிங்கில் விக்கெட்களை இழக்கிறோம் என்று கேப்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருத்துராஜ் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு..

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கேவை வீழ்த்தியது கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தியது. நடப்புத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை, தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.