அதிரடி காட்டிய பேட் கம்மின்ஸ்
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கருண் நாயர், டுப்ளெஸிஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்திலேயே கருண்நாயர் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, இரண்டாவது ஓவரின் 2-வது பந்தில் டுப்ளெஸிஸ் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில், இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அபிஷேக் போரலும் 8 ரன்னில் தனது விக்கெட்டை இழக்க, 2 ஓவரிலேயே 3 விக்கெட்டை இழந்து டெல்லி அணி தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய கே.எல். ராகுல் நிதானமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 3-வது ஓவரிலேயே ஜெய்தேவ் உனத்கட் பந்துவீச்சில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்
அடுத்து கேப்டன் அக்சர் படேலும், 6 ரன்னில் ஆட்டமிழக்க, விப்ராஜ் நிகம் 18 ரன்னில் ரன் அவுட்டானார். இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய அஷுதோஷ் ஷர்மா 41 ரன்கள் அடித்த நிலையில், அபினவிடம் கேட்ச் கொடுத்து, தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நிதானமாக விளையாடிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஐதரபாத் அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி அணியின் வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 133 மட்டுமே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சேர்த்தது.
கைவிடப்பட்ட போட்டி
இந்த நிலையில் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிங்க ஐதரபாத் அணி காத்திருந்த நிலையில், குறுக்கே இந்த கவுசிக் வந்தா? என்பது போல், போட்டியின் நடுவில் மழை குறுக்கிட்டதால் போட்டி தடைப்பட்டது. நீண்ட நேரம் விடாமல் கொட்டித்தீர்த்த கன மழையால், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சன்ரைசர்ஸ் அணிக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.
ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த SRH
இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த முடிவால் ஐதரபாத் அணி அதிகாரப்பூர்வமாக பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. ஐதராபாத் அணி தற்போது 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி அணி 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.