ஐபிஎல் 2025

IPL2025: ஈடன் கார்டனில் கொட்டிய கனமழை.. கொல்கத்தா - பஞ்சாப் போட்டி ரத்து!

கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் பேட்டிங் செய்த நிலையில், கொல்கத்தா பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றையப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

IPL2025: ஈடன் கார்டனில் கொட்டிய கனமழை.. கொல்கத்தா - பஞ்சாப் போட்டி ரத்து!
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டி, கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஐபிஎல் தொடரில், வித்தியாசமான பல சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், நேற்றையப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் நேற்றையப்போட்டியில் 2வது இன்னிங்ஸ் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

பஞ்சாப் வீரர்கள் அதிரடி

நேற்றைய போட்டியில், டாஸ்வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதிரடியாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய பிரியன்ஸ் ஆர்யா 35 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 69 ரன்கள் எடுத்த நிலையில், ஆண்ட்ரே ரசல் பந்து வீச்சில், வைபவ் அரோராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில், கொல்கத்தா வீரர்களை பந்துகளை நாலாப்பக்கமும் சிதறடித்தார் பிரப்சிம்ரன் சிங். நேற்றைய போட்டியில், அதிரடியாக விளையாடிய அவர், 49 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகள் என 83 ரன்கள் எடுத்த நிலையில், வைபவ் அரோரா பந்து வீச்சில் பவலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் மற்றும் மாக்ரோ ஜான்சன் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்களிலும், ஜோஸ் இங்கிலிஸ் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மழையினால் போட்டி ரத்து

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. போட்டி தொடங்கப்பட்டு, ஒரே ஒரு ஓவர் மட்டும் வீசப்பட்ட நிலையில், கனமழை குறுக்கிட்டது. தொடர்ந்து, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நின்று விடும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அதன் பின்னர் வெகுநேரம் காத்திருந்த, நடுவர்கள் இறுதியாக போட்டியை ரத்து செய்ய முடிவு செய்தனர். நடப்பு சீசனில் ஒரு போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். புள்ளிப்பட்டியலில், அடுத்த இடத்திற்கு முன்னேற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த நடப்பு சாம்பியன் கொல்கத்தாவிற்கு இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது பெரும் பிரச்னையாக உள்ளது.

புள்ளிப்பட்டியலில் பின்தங்கிய நடப்பு சாம்பியன்

மழையினால் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டு அணிகளுக்கும், தலா ஒரு புள்ளிகளைப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலம்புள்ளிப்பட்டியலில், பஞ்சாப் கிங்ஸ் அணி 11 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது. 7 புள்ளிகளை பெற்ற கொல்கத்தா அணி 7வது இடத்தில் உள்ளது.