இந்தியா

பகல்ஹாம் தாக்குதல் எதிரொலி.. குப்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனை ஆயுதங்கள் பறிமுதல்

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பகல்ஹாம் தாக்குதல் எதிரொலி.. குப்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனை ஆயுதங்கள் பறிமுதல்
பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் பொறுப்பேற்றது. இதனையடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், அமைதிப் பேணும் நாடான இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது, வாகா எல்லையை மூடியது என பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கடந்த 24-ம் தேதி இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், இந்திய ராணுவமும் அதற்கு பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டுகள் வைத்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனையடுத்து பந்திப்புரா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அல்தாப் லாலி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ளூர் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் பயன்படுத்திய ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.