ஐபிஎல் 2025

Vaibhav Suryavanshi: யார்டா இந்த பையன்.. முதல் போட்டியில் 3 சாதனைகளை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி

தான் விளையாடிய முதல் போட்டியிலேயே கிரிக்கெட் ரசிகர்களின் புருவத்தை உயர்த்தும் வண்ணம் பேட்டை சுழற்றியுள்ளார் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி.

Vaibhav Suryavanshi: யார்டா இந்த பையன்.. முதல் போட்டியில் 3 சாதனைகளை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி
14 years old Vaibhav Suryavanshi achieves 3 record in his debut ipl match
ஐபிஎல் தொடர் ஏன், மற்ற லீக் தொடர்களிலிருந்து வேறுபட்டு உள்ளது என்பதற்கு நேற்று பதில் கிடைத்திருக்கும். 14 வயதான சிறுவன் களத்தில் இறங்கி, சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்த காட்சி உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

நேற்றைய தினம் ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைப்பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில்
14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இம்பெக்ட் ப்ளேயராக களமிறங்கினார்.

முதல் போட்டியிலேயே மூன்று சாதனைகள்:

முதல் போட்டியிலேயே மூன்று சாதனைகளுக்கு சொந்தகாரர் ஆகியுள்ளார் வைபவ். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

இதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்த 10வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள ஷர்துல் தாக்கூரின் பந்தில் தான் சிக்ஸ் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

1. 2008 இல் தொடங்கிய ஐபிஎல் தொடரிலிருந்து தற்போது வரை, மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் வீரர் என்கிற பெயரை சூரியவன்ஷி பெற்று உள்ளார். அவருக்கு வயது 14 மட்டுமே (14 வயது 23 நாட்கள்).இதன் மூலம் 2019-ல் 16 வயது 157 நாட்களில் ஐபிஎல்லில் அறிமுகமான பிரயாஸ் ரே பர்மனின் சாதனையை சூரியவன்ஷி முறியடித்தார்.

2. ஐபிஎல்லில் சிக்ஸர் அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் சூரியவன்ஷி பெற்றார். நேற்றைய போட்டிக்கு முன்பு, இந்த சாதனையை ஆர்ஆர் அணிக்காக விளையாடும் ரியான் பராக் வைத்திருந்தார். பராக் ஐபிஎல் போட்டியில் சிக்ஸர் அடித்த போது, அவருக்கு 17 வயது 161 நாட்கள்

3. ஐபிஎல்லில் பவுண்டரி அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் சூரியவன்ஷி பெற்றுள்ளார். நேற்றைய போட்டிக்கு முன்பு, பிரயாஸ் ரே பர்மன் இந்த சாதனையை ஆறு ஆண்டுகளாக வைத்திருந்தார்.

சாதனையிலும் சோதனை:

என்னதான் தனிப்பட்ட சாதனை நிகழ்த்தியிருந்தாலும் இறுதியில் லக்னோ அணியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோற்றது.

முதலில் பேட் செய்த லக்னோ அணி, 180 ரன்கள் குவித்தது. இலக்கை விரட்டி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வாலுடன் கைக்கோர்த்த வைபவ் முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தது. 20 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்த வைபம், மார்க்ரம் பந்து வீச்சில் ரிஷப் பந்தால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

நல்ல அடித்தளம் கிடைத்தும் நூலிழையில் வெற்றியை கோட்டை விட்டது ராஜஸ்தான் அணி. இது ராஜஸ்தான் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும். ப்ளே-ஆப் வாய்ப்பு என்பது ராஜஸ்தான் அணிக்கு முற்றிலும் மங்கிவிட்டது என்றே கூறலாம்.