பெரம்பலூரில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினரும்,திமுக துணை பொதுச் செயலாளருமான திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திமுகவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு பேசிய சிவா, ”தமிழகத்திற்கு போர் அறிவிப்பு வந்துவிட்டது.ஒரு புதிய படையெடுப்பு நடத்திருக்கிறது. பதுங்கி இருந்த பகை கூட்டம் வேறு ஒருவரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. எத்தனை படையை கூட்டி வந்தாலும் அதை சந்திப்பதற்கு தமிழகம் தயாராக உள்ளது. அதிமுகவை மிரட்டி அச்சுறுத்தி பாஜகவுடன் சேரவில்லை என்றால் நடப்பதை வேறு என்று மிரட்டி அவர்களையும் தங்கள் கைக்குள்ளே அழைத்து வந்து திமுக ஆட்சியை என்ன செய்கிறோம் பார்? என்று சவால் விடுகிறார்கள். பாஜகவின் வாட்டர் லூ தமிழகமாகத்தான் இருக்கும்” என குறிப்பிட்டார்.
வாட்டர் லூ என்றால் என்ன?
”உலகை ஆண்ட மன்னர்களில் முக்கியமானவர் மாவீரன் நெப்போலியன். அவர் சென்ற இடமெல்லாம் வெற்றி. உலகில் எல்லா நாடுகளும் அவருக்கு கீழ் என்று இருந்த நேரத்தில் "என்னை வெல்ல எவரும் இல்லை" என்று எண்ணியவன் முதன்முதலாக தோற்ற இடம் தான் வாட்டர்லூ என்பது சரித்திரத்தில் இருக்கிறது .
தற்போது பாரதிய ஜனதா கட்சி அதே வித்தைகளைதான் காட்டிவிட்டு தமிழ்நாட்டுக்கு வருகிற பொழுது இங்கே அவர்களுக்கு வாட்டர்லூவாக தமிழகம் அமையப்போகிறது. இங்குதான் தோல்வியை காணப் போகிறார்கள். அவர்களுக்கு பாடம் புகட்ட தமிழ்நாட்டு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” எனவும் சிவா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,மாணவரணி,இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.