இந்தியா

உச்சநீதிமன்றம் குறித்து பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சு: கடிவாளம் போட்ட ஜே.பி.நட்டா

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே விமர்ச்சித்த விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எம்பி நிஷிகாந்த் கருத்து பாஜகவின் கருத்தல்ல என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் குறித்து பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சு: கடிவாளம் போட்ட ஜே.பி.நட்டா
JP Nadda warns BJP MP Nishikant Dubey controversial speech on against Supreme Court
ஜார்க்கண்டிலிருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிஷிகாந்த் துபே, செப்டம்பர் 2024 முதல் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும், வர்த்தகக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

உள்நாட்டு வன்முறைக்கு காரணம் உச்சநீதிமன்றமா?

இந்நிலையில் வக்ஃப் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை, மேற்கு வங்காளத்தில் நடைப்பெற்ற வன்முறை தொடர்பான கேள்விக்கு ANI-க்கு நிஷிகாந்த் அளித்த பேட்டியில், ”நாட்டில் நடக்கும் உள்நாட்டு வன்முறை சம்பவங்களுக்கு காரணம் உச்சநீதிமன்றமும், அதன் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவும் தான்” என பதிலளித்து இருந்தார்.

மேலும், ”நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிப்பது, ஜனாதிபதிக்கு மசோதாக்களை நிறைவேற்ற காலக்கெடுவை நிர்ணயிப்பது” போன்ற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார் நிஷிகாந்த்.

”இந்திய தலைமை நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற இந்த நிபந்தனை எங்கிருந்து வந்தது என்று சொல்லுங்கள்? அரசியலமைப்பின் எந்தப் பிரிவு நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம் வழங்க முடியும் என்று கூறுகிறது? அரசியலமைப்பை திருத்துவது நாடாளுமன்றம் மட்டுமே. நீதிமன்றம் அதை தனது வேலை என்று நம்பினால், நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் மூடட்டும்” எனவும் முன்னணி ஊடக நிறுவனத்திடம் தெரிவித்து இருந்தார்.

கடிவாளம் போட்ட பாஜக தேசிய தலைவர்:

நிஷிகாந்தின் கருத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் பாஜக நோக்கி வரும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.

ஜே.பி.நட்டா கூறுகையில், ”நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதி குறித்து பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுடன் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இவை அவர்களின் தனிப்பட்ட கருத்துகள். ஆனால் பாஜக அத்தகைய கருத்துகளுடன் உடன்படவில்லை என்பதோடு இதுப்போன்ற கருத்துகளை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. பாஜக இந்த கருத்தினை முற்றிலுமாக நிராகரிக்கிறது”

“பாஜக எப்போதும் நீதித்துறையை மதித்து அதன் உத்தரவுகளையும்,பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனெனில், உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நமது ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும், மேலும் நமது அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வலுவான தூணாக நீதிமன்றங்கள் விளங்குவதாக நாங்கள் ஒரு கட்சியாக நம்புகிறோம். அவர்கள் இருவருக்கும், மற்ற அனைவருக்கும் இதுபோன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலை தொடர்ந்து தன் கருத்திலிருந்து பின்வாங்கியுள்ளார் எம்பி நிஷிகாந்த் துபே. “நான் பாஜக கட்சியின் விதிகளை பின்பற்றும் ஒழுக்கமான சிப்பாய். கட்சி என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பேன்” எனவும் முன்னணி ஊடக நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.