தொழில்நுட்பம்

90 நாட்கள் ரீ-சார்ஜ் திட்டம்: ஏர்டெல்லுக்கு ஷாக் கொடுத்த ஜியோ நிறுவனம்!

ஜியோ நிறுவனம் 90 நாட்கள் செல்லுப்படியாகும் புதிய ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மற்ற முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், விஐ-க்கு ஷாக் கொடுத்துள்ளது.

90 நாட்கள் ரீ-சார்ஜ் திட்டம்: ஏர்டெல்லுக்கு ஷாக் கொடுத்த ஜியோ நிறுவனம்!
Reliance Jio introduces new recharge plan lasting 90 days
ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழ்கிறது. நாடு முழுவதும் சுமார் 46 கோடி ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஜியோ சிம்-ஐ பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு ரீ-சார்ஜ் கட்டணத்தை உயர்த்தின. இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் ரீ-சார்ஜ் கட்டணத்தை உயர்த்த தொலை தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தான், இருக்கிற வாடிக்கையாளர்களை தக்க வைக்க புதுப்புது அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது ஜியோ நிறுவனம். அந்த வகையில் சமீபத்தில்,90 நாட்கள் செல்லுப்படியாகும் புதிய ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஜியோ.

ரூ.899-க்கு 90 நாட்கள்:

இந்த புதிய திட்டம் வெறும் ரூ.899-க்கு கிடைக்கிறது. இந்த திட்டமானது முழு மூன்று மாதங்கள் அதாவது 90 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்குக்கும் 90 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த அழைப்பு வசதி உள்ளூர் மற்றும் எஸ்டிடி நெட்வொர்க்குகளுக்கும் பொருந்தும். இலவச அழைப்போடு, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் அனுப்பலாம். இந்த திட்டத்தின் டேட்டா நன்மைகளைப் பற்றி பேசுகையில், இது 90 நாட்களுக்கு மொத்தம் 180 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இதனுடன், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 20 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

இதன் மூலம், திட்டத்தில் மொத்தம் 200 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஜியோ சில கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில், உங்களுக்கு 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டாரின் இலவச சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் ஐபிஎல் 2025 போட்டிகளை உட்பட சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களையும் காணலாம். ஜியோ டிவி மற்றும் 50 ஜிபி ஜியோ கிளவுட் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஏர்டெல்லில் எவ்வளவு?

மற்ற நெட்வோர்க் உடன் ஒப்பிடுகையில், இந்த திட்டமானது மிகவும் சிக்கனமானது. 3 மாதங்கள், தினசரி 2 ஜிபி டேட்டா என பார்த்தால் தற்போது ஏர்டெல்லில், ரூ.979-க்கு 84 நாட்கள் செல்லுப்படியாகும் திட்டம் நடைமுறையில் உள்ளது.ஜியோவின் புதிய திட்டத்துடன் ஒப்பிடுகையில் பணம் மிச்சமாவதோடு, டேட்டாவும் அதிகம் கிடைக்கிறது என பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜியோவினை சமாளிக்கும் வகையில், ஏர்டெல், VI மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களும் புதிய திட்டங்களை வரும் காலங்களில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.