வயநாட்டில் தற்காலிக பாலங்கள்.. மீட்பு பணியில் ராணுவம்.. தாராள நிதி தர பினராயி விஜயன் வேண்டுகோள்

Wayanad Landslide : ஒரு கிராமத்தையே மூடி மறைத்துள்ள மண்ணுக்கு மேலே பல ராட்சத பாறைகள் கிடப்பதால் உள்ளே இருக்கும் உயிரற்ற உடல்களை மீட்க முடியாமல் மீட்பு படையினர் தவித்து வருகின்றனர். தற்காலிக பாலம் அமைத்த ராணுவ வீரர்கள் விடாமல் போராடி வருகின்றனர்.

Aug 1, 2024 - 09:48
Aug 2, 2024 - 10:21
 0
வயநாட்டில் தற்காலிக பாலங்கள்..  மீட்பு பணியில் ராணுவம்.. தாராள நிதி தர பினராயி விஜயன் வேண்டுகோள்
wayanad landslide pinarayi vijayan

Wayanad Landslide : வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைத்து மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.நிலச்சரிவில் சிக்கிய 1,500க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 225 பேர் மாயமாகி உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த திங்கள் கிழமை பெய்த கனமழை காரணமாக அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்தனர். பல நூறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கனமழைக்கு இடையேயும் மீட்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம் காரணமாக பல இடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ரோப் மூலமாக பலர் மீட்கப்பட்டனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணியை விரைந்து மேற்கொள்ள, ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைக்க ராணுவத்தினர் முடிவுசெய்தனர். இதற்கான உபகரணங்கள் டெல்லி மற்றும் பெங்களூரிலிருந்து விமானங்கள் மூலம் வயநாடு கொண்டு வரப்பட்டு, தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

இது குறித்து கேரள அமைச்சர் ராஜன் அளித்த பேட்டியில், ‘‘ ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் படைப்பிரிவு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மீட்பு பணிக்கு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு ராணுவத்தின் தற்காலிக பாலம் மிக முக்கியமானது. பாலத்தின் பாகங்கள் விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வயநாடு கொண்டுவரப்பட்டுள்ளன. ராணுவத்தினர் 5 மணி நேரத்துக்குள் இந்த பாலத்தை அமைத்துவிடுவர் என்று கூறினார்.

நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பகுதி மிகப்பெரிய அளவில் அழிவை சந்தித்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அப்பகுதியில் வீடுகள் இருந்த தடயமே இல்லாமல் மண்மூடி காணப்படுகிறது. அனைத்து இடங்களும் சேற்று மண், மரங்கள், பாறைகளால் மூடப்பட்டுள்ளன. புதையுண்ட பலரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.உயிரிழப்பு எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ள நிலையில், முண்டக்கை பகுதியை சேர்ந்த 225 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்கள் மண்ணோடு மண்ணாக புதையுண்டனரா அல்லது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
வயநாட்டில் மீட்பு, நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உணவு பொருட்களை கொண்டு செல்ல கடற்படை உதவி கோரப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் உட்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.நிலச்சரிவில் சிக்கிய 1,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 225 பேர் மாயமாகி உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணிகள் உட்பட 8,017 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 57 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 30-ம் தேதி மாலைதான் சிவப்பு எச்சரிக்கை தரப்பட்டது. வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரணத்துக்காக கேரள மாநில அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம், முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது. நிவாரண பணிகள் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் இன்று ( ஆகஸ்ட் 1) நடைபெற உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மக்கள் தாராளமாக வழங்கவேண்டும். பணமாக அளிப்பவர்கள், கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பொருளாக அளிப்பவர்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பயன்படுத்திய பழைய பொருட்களை தரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

வயநாடு நிலச்சரிவைப் பொருத்தளவில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டன. ஆகவே, உயிரிழப்புகளும் அதிகம், பொருளாதார ரீதியான பாதிப்புகளும் அதிகம் என்ற நிலையில், இதை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow