Murugan Maanadu : பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு.. எதிரொலிக்கும் அரோகரா முழக்கம்.. தயாராகும் அறுசுவை உணவுகள்

Palani Muthamizh Murugan Maaanadu 2024 : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 24) தொடங்க உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Aug 24, 2024 - 07:06
Aug 24, 2024 - 11:53
 0
Murugan Maanadu : பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு.. எதிரொலிக்கும் அரோகரா முழக்கம்.. தயாராகும் அறுசுவை உணவுகள்
Palani Muthamizh Murugan Maaanadu 2024

Palani Muthamizh Murugan Maaanadu 2024 : பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 நாட்களும் 3 வேளை உணவு வீதம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு பல வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளன. 

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநியில் ஆகஸ்ட் 24 மற்றும் ஆகஸ்ட் 25ஆம் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் 2 நாட்களும் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டில் சமயப் பெரியோர், ஆன்மிக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது தவிர, உள்நாட்டினர் 774 பேர், வெளிநாட்டினர் 187 பேர் என மொத்தம் 961 பேர் மாநாட்டில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர். 39 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 1,003 பேர் ஆய்வு கட்டுகரைகள் சமர்ப்பித்துள்ளனர்.

சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்குவதற்காக திண்டுக்கல் மற்றும் பழநியில் உள்ள தனியார் விடுதிகள், தேவஸ்தான விடுதிகளில் 586 அறைகள் தயார் நிலையில் உள்ளன. மாநாடு நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரியில் 4.40 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கம், 500 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவு கூடம், 200 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் விஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் 3டி திரையரங்கம், அறுபடை வீடு கண்காட்சி அரங்கம், கலையரங்கம் அறுபடை வீடுகளின் பெயரில் 6 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கம், உணவு கூடம், கண்காட்சி அரங்கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 நாட்களும் 3 வேளை உணவு வீதம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு பல வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளன. இதற்காக ஆங்காங்கே பல பிரம்மாண்டமான சமையலறைகள், உணவு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். கூட்ட நெரிசலை தடுக்க, உணவை 10 இடங்களில் வைத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு வரும் பங்கேற்பாளர்கள், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சிறப்பு விருந்தினர்கள், முன்பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கு 3,000 பிரசாதப் பைகள், பக்தர்களுக்கு 50,000 பிரசாதப் பைகள் என மொத்தம் 53,000 பிரசாதப் பைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. முருகனின் படத்துடன் கூடிய பிரசாதப் பையில் சிறிய அளவிலான முருகன் படம், விபூதி, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், சிறிய துண்டு, கந்தசஷ்டி கவசம் புத்தகம், லட்டு, முறுக்கு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

அறநிலையத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் உட்பட அனைவரும் ஒரே மாதிரியான ஆடைகள் அணிவதற்காக 850 பேருக்கு 2 செட் வேட்டி, சட்டை, 2 சேலைகள் வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டு நிகழ்ச்சிகளை 22 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. மலைக் கோயில், கிரிவலப் பாதை மற்றும் மாநாடு நடைபெறும் இடம் என மொத்தம் 17 இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 இடங்களில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

பேருந்து நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்து செல்ல 10 பேட்டரி கார்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 226 இடங்களில் மொபைல் டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல், பழநி, சிவகிரிப்பட்டி சாலை உட்பட 6 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு நடைறும் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கம், உணவுக் கூடம் குறித்த இடங்களை அடையாளம் காண வசதியாக தமிழ், ஆங்கலத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டுள்ளன. மாநட்டை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பழநியில் இருந்து மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow