அரசியல்

தமிழகத்தை 4 ஆண்டுகள் முதலமைச்சர் சீரழித்துள்ளார் - இபிஎஸ் விமர்சனம்

பாஜக பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தை 4 ஆண்டுகள் முதலமைச்சர் சீரழித்துள்ளார் - இபிஎஸ் விமர்சனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல கோடிகளை கொட்டிக் கொடுத்து, சில கட்சிகளை அடிமைகளாக விலைக்கு வாங்கி, அவர்கள் தயவால் ஆட்சி அமைத்து, பல்லாயிரம் கோடிகளை கொள்ளை அடித்துள்ள ஊழல் பணத்திற்கு ஆப்பு அடிக்கும் விதமாக, (மார்.11 ) மத்திய உள்துறை அமைச்சர், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததையடுத்து ஸ்டாலின் அலறித் துடிப்பதாக கூறியுள்ளார்.

பா.ஜ.க. புகுந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டியே தமிழக மக்களை, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் நாட்டில் ஒரு நிர்வாகத் திறனற்ற ஆட்சியை பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வந்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பட்டப் பகலில் கொலை வெறியாட்டங்கள், நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலைகள், தனியாக வசிக்கும் முதியோர்களைக் குறிவைத்து, கொலை செய்து கொள்ளை அடித்தல், மணல் கொள்ளை, மூன்று முறை சொத்து வரி -தண்ணீர் வரி மின்கட்டண உயர்வு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு, நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்று, தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல், நான்காண்டு காலத்தைக் கழித்துவிட்டார் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர்குற்றஞ்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு, தொகுதி மறுசீரமைப்பு, நீட் விவகாரம் என்று தமிழக மக்கள் இதுவரை அனுபவித்துவந்த சிரமங்களை மடைமாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாகவும், அதிமுக தலைமையிலான கூட்டணி குறித்து புலம்பல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

அன்று முதல் இன்று வரை, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து எழும் துணிச்சல் இல்லாத முதலமைச்சர் தங்களைப் பார்த்து ஏகடியம் பேசுவதை கண்டு மக்கள் எள்ளி நகையாடுவதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.