இந்தியா

போலீசாருக்கு சவால் விட்ட 'சிக்மா கேங்'.. என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகள்!

போலீசாரால் மிகவும் தேடப்பட்ட 'சிக்மா கேங்' என்ற ரவுடிகள் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

போலீசாருக்கு சவால் விட்ட 'சிக்மா கேங்'.. என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகள்!
4 Rowdies were shot dead in an encounter
பீகார் மாநிலத் தேர்தலுக்கு முன் பெரிய சதித்திட்டத்தைத் தீட்டியதாகக் கூறப்படும், மிகவும் தேடப்பட்டு வந்த 'சிக்மா கேங்' என்ற ரவுடிகள் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர், டெல்லியில் இன்று அதிகாலை நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

என்கவுன்ட்டர் நடந்தது எப்படி?

டெல்லி மற்றும் பீகார் போலீஸ் குழுக்களுக்கும், இந்தக் கும்பலைச் சேர்ந்த ரவுடிகளுக்கும் இடையே இன்று அதிகாலை 2.20 மணியளவில் வடமேற்கு டெல்லியில் இந்தச் துப்பாக்கி சண்டை நடந்தது.

போலீசார் இந்தக் கும்பலை வழிமறிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிக்கும் நோக்குடன் போலீசாரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இதற்குப் பதிலடியாகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நான்கு ரவுடிகளுக்கும் காயம் ஏற்பட்டது.

உடனடியாக இவர்கள் ரோஹினியில் உள்ள பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், நான்கு பேரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

யார் இந்தக் கும்பல்?

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், ரஞ்சன் பதக் (25), விம்லேஷ் மஹ்தோ (25), மணீஷ் பதக் (33), மற்றும் அமன் தாக்கூர் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ரஞ்சன் பதக் இந்தக் கும்பலின் தலைவன் என கூறப்படுகிறது.

சிக்மா கேங் எனப்படும் இந்தக் கும்பல் கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. பீகாரில் கொலை, பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, பெரிய அளவில் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளனர்.

ரஞ்சன் பதக்கின் பின்னணி

கொல்லப்பட்ட ரஞ்சன் பதக், பீகாரின் சீதாமரி மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நடந்த ஐந்து கொலைகள் உட்பட 8 கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்டவர். இவனைக் கைது செய்ய ரூ.25,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. ரஞ்சன் பதக் சமூக வலைதளங்கள் மற்றும் ஆடியோ செய்திகள் மூலம் போலீசாருக்குத் சவால் விட்டு வந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிக்மா கேங், பீகார் போலீஸ் பிடியிலிருந்து தப்பவே டெல்லியில் வந்து மீண்டும் குழுவாகச் செயல்பட முயன்றுள்ளது. பீகார் தேர்தலுக்கு முன்னால் இக்கும்பல் ஒரு பெரிய சதித்திட்டத்தைத் தீட்டியிருந்ததாக ஒரு ஆடியோ பதிவு மூலம் தெரிய வந்துள்ளது.

என்கவுன்ட்டர் நடந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, தடயவியல் நிபுணர்கள் வந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். இந்தக் கும்பலின் மற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகள் குறித்துத் தீவிர விசாரணை நடந்து வருகிறது.