இந்தியா

டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: ராகுல் காந்திக்கு 3-வது வரிசையில் இருக்கை.. மீண்டும் சர்ச்சை!

டெல்லியில் நடைபெற்று வரும் குடியரசு நாள் கொண்டாட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: ராகுல் காந்திக்கு 3-வது வரிசையில் இருக்கை.. மீண்டும் சர்ச்சை!
Rahul Gandhi gets a seat in the 3rd row
நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று டெல்லி கடமைப் பாதையில் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைக்க, வானில் இருந்து ஹெலிகாப்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தின. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியோ லுயிஸ் சாண்டோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

படை வலிமையும் வீர விருதுகளும்

இந்த விழாவில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்திய வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு நாட்டின் உயரிய ராணுவ விருதான 'அசோக சக்ரா'வை குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து, லெப்டினென்ட் ஜெனரல் பாவ்னீஷ் குமார் தலைமையில் முப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பும், 29 போர் விமானங்களின் வான்வழிச் சாகசங்களும் இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தையும் படை வலிமையையும் உலகிற்குப் பறைசாற்றின.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்குப் பின்வரிசை?

பிரம்மாண்டமான இந்த விழாவிற்கு இடையே, இருக்கை ஒதுக்கீடு தொடர்பான ஒரு சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். ஆனால், அவர்களுக்கு முதல் இரண்டு வரிசைகளில் இடம் ஒதுக்கப்படாமல் மூன்றாவது வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. முதல் வரிசைகளில் மத்திய அமைச்சர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமர்ந்திருந்தனர்.

தொடரும் சர்ச்சை

கடந்த 2024-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவிலும் ராகுல் காந்திக்குக் கடைசிக்கு முந்தைய வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. பிரதமருக்கு அடுத்த நிலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்று காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இந்த அதிருப்தி காரணமாகப் புறக்கணிப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி, இந்த ஆண்டு பங்கேற்ற போதும் மீண்டும் பின்வரிசையில் அமர வைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.