இந்தியா

பாலியல் சீண்டல் என குற்றச்சாட்டு: 42 வயது நபர் தற்கொலை.. வீடியோ வெளியிட்ட பெண் கைது!

கேரளாவில் தீபக் (42) என்பவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் சீண்டல் என குற்றச்சாட்டு: 42 வயது நபர் தற்கொலை.. வீடியோ வெளியிட்ட பெண் கைது!
Woman who posted the video arrested
கேரளாவில் பேருந்து பாலியல் குற்றச்சாட்டால் தீபக் என்பவர் உயிரை மாய்த்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. வீடியோ வெளியிட்டு இதற்கு காரணமாக இருந்த ஷிம்ஷிதா முஸ்தபா (35) என்ற இளம்பெண் தலைமறைவாக இருந்தநிலையில் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உயிரைப் பறித்த அந்த 'வைரல்' வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன்பு பய்யனூர் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் பயணித்தபோது தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி, ஷிம்ஜிதா ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ மின்னல் வேகத்தில் வைரலானது. இதனால் சமூக ரீதியாகவும், பொதுமக்களாலும் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளான தீபக், மிகுந்த மனவேதனையில் கடந்த 18 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

தலைமறைவும் போலீஸ் தேடுதலும்

இதனை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் ஷிம்ஜிதா தலைமறைவானார். அவர் துபாயில் பணிபுரிந்து வந்தவர் என்பதால், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க போலீஸார் அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர். இந்நிலையிலும், அவர் கோழிக்கோடு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, வடகரையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

எடிட் செய்யப்பட்ட வீடியோ? - போலீஸ் விசாரணை

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பல துண்டுகளைக் கொண்டு எடிட் செய்யப்பட்டது எனச் சந்தேகிக்கப்படுகிறது. "உண்மை நிலையை அறியவும், தீபக் மீதான குற்றச்சாட்டு உண்மையா அல்லது உள்நோக்கத்துடன் வீடியோ பகிரப்பட்டதா என்பதை உறுதி செய்யவும் அசல் வீடியோ பதிவுகள் அவசியம்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக ஷிம்ஜிதாவின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும், அவர் ஏற்கனவே இதே பாணியில் வேறு யாரையும் மிரட்டியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணை கோரிக்கை

இதற்கிடையில், இந்த வழக்கில் போலீஸார் ஷிம்ஜிதாவிற்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, 'அகில கேரளா ஆண்கள் சங்கம்' கேரள உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கை சிபிஐ (CBI) அல்லது குற்றப்பிரிவு (Crime Branch) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், ஷிம்ஜிதாவின் செல்போனை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.