இந்தியா

உறைபனியிலும் குறையாத அன்பு.. உயிரிழந்த எஜமானரை விட்டுப் பிரியாமல் காவல் காத்த நாய்!

இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த உரிமையாளரின் உடலை, பிட்புல் நாய் நான்கு நாட்களாக உணவுமின்றி, காட்டு விலங்குகளிடமிருந்து காத்து நின்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உறைபனியிலும் குறையாத அன்பு.. உயிரிழந்த எஜமானரை விட்டுப் பிரியாமல் காவல் காத்த நாய்!
A love that never diminishes even in the cold
விலங்குகளின் அன்பு ஈடுஇணையற்றது என்பதற்குச் சான்றாக இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. உறைபனி மற்றும் பனிப்புயலுக்கு மத்தியிலும், உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை விட்டுப் பிரியாமல் நான்கு நாட்களாகக் காவல் காத்த ஒரு வளர்ப்பு நாயின் விசுவாசம் ஒட்டுமொத்த தேசத்தையும் கண்கலங்க வைத்துள்ளது.

பனிப்பொழிவில் நேர்ந்த துயரம்

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம் பார்மூர் பகுதியைச் சேர்ந்த பிக்ஷித் ராணா மற்றும் பியூஷ் ஆகிய இரு இளைஞர்கள், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி அங்குள்ள பர்மணி கோயிலுக்குச் சென்றுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அப்போது ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலில் சிக்கி அந்த இரு இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் வீடு திரும்பாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்புக் குழுவினருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

உடலை மீட்ட மீட்புக் குழுவினர் கண்ட காட்சி

நீண்ட தேடுதலுக்குப் பிறகு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்தபோது, அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் உரைய வைத்தது. பியூஷின் உடல் பனி அடுக்குகளுக்கு அடியில் முழுமையாகப் புதைந்து கிடந்தது. ஆனால், அந்த உறைபனியிலும், பியூஷ் வளர்த்து வந்த 'பிட்புல்' இன நாய், அவரது உடலுக்கு அருகிலேயே நான்கு நாட்களாகக் காத்துக் கிடந்தது. உணவு, தண்ணீர் ஏதுமின்றி, கடும் காற்றையும் பனிப்புயலையும் பொருட்படுத்தாமல் தனது உரிமையாளரின் உடலை விட்டு ஓரிடமும் நகரவில்லை அந்த வாயில்லா ஜீவன்.

காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு

நான்கு நாட்களாகத் திறந்த வெளியில் இருந்த உடலைக் காட்டு விலங்குகள் ஏதும் சிதைக்காமல் அந்த நாய் பாதுகாத்துள்ளது. மீட்புக் குழுவினர் அங்கு சென்றபோது, முதலில் அவர்களைத் தனது உரிமையாளரின் உடல் அருகே நெருங்க விடாமல் அந்த நாய் சீறியுள்ளது. பின்னர், அவர்கள் தனக்கு உதவவும், உடலை மீட்கவும்தான் வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட அந்த நாய், மெதுவாக அங்கிருந்து நகர்ந்து மீட்புக் குழுவினருக்கு வழிவிட்டது. இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட மீட்புப் படையினர் உணர்ச்சிவசப்பட்டுத் திகைத்து நின்றனர்.

இணையத்தில் வைரலாகும் விசுவாசம்

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. மனிதர்களுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படும் இந்த காலத்தில், மரணத்தையும் தாண்டிய விசுவாசத்தையும் அன்பையும் விலங்குகளால் மட்டுமே காட்ட முடியும் என இணையவாசிகள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.