இந்தியா

டெல்லி சாமியார் பாலியல் சீண்டல்: "என் அறைக்கு வா, உன்னை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறேன்!"

சாமியார் சைதன்யானந்தா பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

 டெல்லி சாமியார் பாலியல் சீண்டல்:
இளம்பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெல்லி சாமியார் சைதன்யானந்தா
டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் மேலாண்மை நிறுவனத்தில், பெண்களைப் பாலியல் சீண்டல் செய்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியின் லீலைகள் அம்பலமாகியுள்ளன. இந்த சாமியார், தன்னை 'இயக்குனர்' என்று கூறிக்கொண்டு, பல இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சாமியார் மீது குற்றச்சாட்டு

"என் அறைக்கு வா... நான் உன்னை வெளிநாட்டுப் பயணத்திற்கு அழைத்துச்செல்கிறேன், நீ ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம்" என்று சைதன்யானந்தா பெண்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

மேலும், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 50 பெண்களின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தபோது, இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. கடந்த 16 ஆண்டுகளாக இந்த சாமியார் பல பெண்களை இப்படி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

பணம் தருவதாக ஆசை காட்டுவது, அல்லது தேர்வில் குறைவான மதிப்பெண் போடுவேன் என்று மிரட்டுவது போன்ற செயல்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார். "எனக்கு கீழ்ப்படியவில்லை என்றால், நான் உன்னை ஃபெயில் ஆக்குவேன்..." என்று ஒரு குறுஞ்செய்தியில் அனுப்பி அவர் மிரட்டியுள்ளார்.

யார் இந்த சாமியார்?

போலீசாரின் விசாரணையில், இந்த சாமியாரின் உண்மையான பெயர் பார்த்தசாரதி என்றும், அவர் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2009 மற்றும் 2016-ல் அவர் மீது இரண்டு முறை பாலியல் தொல்லை வழக்குகள் பதிவாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மீண்டும் தைரியத்துடன், கடந்த 16 ஆண்டுகளாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

2016-ல் அதே வசந்த் குஞ்ச் ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் புகார் அளித்தும், போலீசார் அல்லது ஆசிரம நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழைப்பெண்கள் பாதிப்பு

இந்த சாமியார் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஏனெனில், இந்த பெண்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ போலீசில் புகார் அளிக்க மாட்டார்கள் என்று அவர் நினைத்துள்ளார்.

இந்த பாலியல் குற்றங்களுக்கு அவருக்கு மூன்று பெண் வார்டன்கள் உதவியாக இருந்துள்ளனர். அவர்களும் வாட்ஸ்அப் மூலம் பெண்களை மிரட்டி, வற்புறுத்தியுள்ளனர்.

சாமியார் தலைமறைவு?

இந்த பாலியல் புகார் வெளிவந்தபோது, அவர் லண்டனில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கடைசியாக அவர் ஆக்ராவில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மீது பாலியல் சீண்டல் மற்றும் மோசடி வழக்குகள் உள்ளன.

மேலும், ஒரு போலி ஐ.நா. வண்டி நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தியதற்காகவும், மோசடி செய்ததற்காகவும் அவர் மீது வழக்குகள் உள்ளன.

ஆசிரமத்தின் நடவடிக்கை

இந்த சாமியார் தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சாரதா பீடத்தின் கிளையை நடத்தி வந்தார். இந்த குற்றச்சாட்டுகள் வெளியான பிறகு, ஆசிரம நிர்வாகம் அவரை வெளியேற்றி விட்டதாக தெரிவித்துள்ளது. சாமியாரின் பாலியல் சீண்டல் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.