தமிழ்நாடு

ரஜினி, விஜய் பட நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

ரஜினி, விஜய் படங்களில் பணியாற்றிய நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஜினி, விஜய் பட நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!
Dancers from Rajinikanth and Vijay films caught in drugs case
சென்னை அசோக்நகர் பகுதியில் மெத்தபெட்டமைன் போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக, திரைப்பட நடன கலைஞர்கள் உட்பட ஏழு பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரகசியத் தகவலின் அடிப்படையில், போலீசார் வடபழனியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவர்களிடமிருந்து போதைப் பொருட்களை வாங்கி, அவற்றைச் சினிமா நடன கலைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகத் தெரிவித்தார்.

நடன கலைஞர்கள் சிக்கியது எப்படி?

யுவராஜ் கொடுத்த தகவலின் அடிப்படையில், 'கூலி', 'கோட்' போன்ற ரஜினிகாந்த் மற்றும் விஜய் படங்களில் நடன கலைஞராகப் பணியாற்றிய பிரவீன் குமார் (27) மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பரத் (22), லோகேஷ் குமார் (21), விக்னேஸ்வரன் (22), சம்பத்குமார் (21) மற்றும் ரகு (25) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, மெத்தப்பட்ட மைன்ட் (7 கிராம்), கெட்டமைன் (2 கிராம்), எல்எஸ்டி ஸ்டாம்ப் (6), மற்றும் கஞ்சா (10 கிராம்) ஆகிய போதைப்பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கும்பல் எங்கிருந்து போதைப்பொருட்களை வாங்குகிறது என்பது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.