இந்தியா

கோயிலுக்கு வருகை தந்த தலித் தலைவர்.. கங்கை நீர் தெளித்த பாஜகவினரால் பரபரப்பு

ராமர் கோயில் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திகாராம் ஜூலி பங்கேற்ற நிலையில் அக்கோயிலை பாஜக தலைவர் ஞான் தேவ் அஹூஜா, கங்கை நீரை கொண்டு சுத்தம் செய்த சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது.

கோயிலுக்கு வருகை தந்த தலித் தலைவர்.. கங்கை நீர் தெளித்த பாஜகவினரால் பரபரப்பு

ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் அமைந்துள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸைச் சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திகாராம் ஜூலி பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஞான் தேவ் அஹூஜா, அந்த கோயிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அறிக்கை வெளியிட்ட ஞான் தேவ் அஹூஜா, புனித மற்றவர்கள் வருகையால் கோயில் களங்கமாகியுள்ளது என்றும் அங்கு கங்கை நீரை தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராமர் கோயிலில் கங்கை நீரைக் கொண்டு அவர் பூஜை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் திகாராம் ஜூலி, “ஞான் தேவ் அஹூஜாவின் செயல் பாஜகவின் மனநிலையை காட்டுகிறது. தீண்டாமை பிரச்சனையை நான் சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளேன். எனது தலித் அடையாளத்தின் காரணமாக பாஜக கோயிலை சுத்தம் செய்கிறது. இது எனது நம்பிக்கையின் மீதான தாக்குதல் மட்டுமல்ல தீண்டாமை தொடர்பான குற்றங்களையும் உக்குவிப்பதாக உள்ளது. தலித்கள் கோயில்களில் வழிபடுவதை கூட பார்க்க முடியாத அளவிற்கு பாஜக அவர்களை வெறுக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “21-ஆம் நூற்றாண்டுகளில் இதுபோன்ற குறுகிய மனப்பான்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செயலுக்கு பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? " என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பாஜக தலைவர் ஞான் தேவ் அஹூஜா செயல் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியதால் அவரை பாஜக, அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக மூன்று நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.