தமிழ்நாடு

அனைத்துக்கட்சி கூட்டம்:அதிமுக பங்கேற்காது- இபிஎஸ் அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு நடத்தும் நாடகம் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அனைத்துக்கட்சி கூட்டம்:அதிமுக பங்கேற்காது- இபிஎஸ் அறிவிப்பு

நீட் தேர்வு

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது, குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், திமுக-வின் காந்திசெல்வன் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்த போது, 21.12.2010-ல் நீட் தேர்வு குறித்து மத்திய அரசிதழில் அறிவிக்கை செய்தது. 2011 முதல் 2016 வரை தமிழ் நாட்டில் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு தற்காலிகமாக விலக்கு பெற்றார்.

திமுக-வின் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி, மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் நீட் தேர்வு தொடர வேண்டும் என்று வாதாடியதுடன், 'எந்தச் சூழ்நிலையிலும், இனி யாராலும் இந்தியாவில் நீட் தேர்வை ஒழிக்க முடியாது' என்று பேட்டி அளித்தார்.


3,500 அரசுப் பள்ளி மாணவர்கள்

ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் அதிகம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், நான் முதலமைச்சராக இருந்தபொழுது மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கி, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இன்றுவரை 3500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் பயின்று வருகின்றார்கள் என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன்.

ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, தேர்தலின்போது பொய்யான தகவலை மாணவர்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் பரப்பி, திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு செய்தீர்களா? இல்லையா? என்றும்; அந்தக் கேள்வியைத்தான் மக்கள் தொடர்ந்து கேட்கிறார்கள் என்றும் பேசினேன்.

மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும்

முதலமைச்சர் ஸ்டாலின் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை இரத்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்று சொல்லியிருக்கிறோமே தவிர, எங்களால் எப்படி இரத்து செய்ய முடியும்? சராசரி மனிதனாக இருக்கக்கூடிய அனைவருக்குமே இது தெரியும். தமிழ் நாடு அரசால் இதை இரத்து செய்ய முடியாது என்றும், மத்திய அரசுதான் இதை இரத்து செய்ய முடியும் என்றும், அதனால்தான் நாங்கள் மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்' என்று சட்டப் பேரவையில் எனக்கு பதில் அளித்தார்.

2021-ல் ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, தமிழகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், உடனடியாகக் குழு அமைப்பது; அறிக்கை விடுவது; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது; சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது, மக்களைக் குழப்பி திமுக ஸ்டாலின் மாடல் அரசு, செய்த தவறுகளை மக்களிடம் மறக்கச் செய்யும் நாடகம்.

நீட் நுழைவுத் தேர்வை இரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதற்கு, திமுக-வின் முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும்.

அதிமுக பங்கேற்காது

2026-ல் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை இரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக 9.4.2025 அன்று சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, அதிமுக, திமுக-வின் ஸ்டாலின் மாடல் திமுக அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காது” என தெரிவித்துள்ளார்.