தமிழ்நாடு

12 ஆண்டுகளுக்கு முன் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம்.. கே.என்.நேரு சகோதரிடம் அதிரடி விசாரணை

12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம்.. கே.என்.நேரு சகோதரிடம் அதிரடி விசாரணை

இளையராஜா தமிழ் மாறன், அறிவு நிதி தமிழ் மாறன் ஆகியோர் இயக்குநர்களாக உள்ள சைதாப்பேட்டை சிஐடி காலனியில் செயல்பட்டு வரும் TrueDom கம்பெனி கடந்த 2013-ஆம் ஆண்டு திருப்பூரில் காற்றாலை அமைப்பதாக கூறி தனியார் வங்கியிடம் இருந்து ரூ. 22.48 கோடியை கடனாக பெற்றுள்ளது. இந்த கடனுக்காக கே.என் நேருவின் சகோதரரான ரவிச்சந்திரன் மற்றும் அவரது நிறுவனமான TVH கட்டுமான நிறுவனம் உத்தரவாத கையெழுத்து போட்டுள்ளனர்.

பின்னர், TrueDom கம்பெனி, வங்கியில் இருந்து தான் வாங்கிய ரூ. 22.48 கோடி உள்ளிட்ட 30 கோடி பணத்தை மூன்று போலி கம்பெனிகள் மூலம் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் நடத்திவரும் TVH கம்பெனிக்கு சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு சிபிஐ இந்த மோசடியை கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தது. தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள கே.என்.ரவிச்சந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.

TrueDom கம்பெனிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? TrueDom கம்பெனிக்கு எதற்காக அவரும், அவரது நிறுவனமும் உத்தரவாத கையெழுத்திட்டீர்கள்? மூன்று போலி கம்பெனிகள் யார் பெயரில் துவங்கப்பட்டது? எதற்காக TrueDom கம்பெனி வாங்கிய ரூ. 22.48 கோடி பணம் உள்ளிட்ட ரூ. 30 கோடி பணத்தை சட்டவிரோதமாக உங்களது நிறுவனமான TVH நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது?என்பது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகிறது.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடியை கண்டுபிடித்து, தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.