ஐபிஎல் 2025

IPL2025: தொடர் தோல்வியில் CSK.. நடப்பு சீசனில் 3-வது வெற்றியை ருசித்த SRH!

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

IPL2025: தொடர் தோல்வியில் CSK.. நடப்பு சீசனில் 3-வது வெற்றியை ருசித்த SRH!
ஐ.பி.எல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்ய சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷேக் ரஷீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே களமிறங்கினர்.

சொதப்பிய சென்னை வீரர்கள்

சன்ரைசர்ஸ் அணியின் பவுலர் முகமது ஷமி முதல் ஓவரின் பந்தை வீச, அதனை எதிர்கொண்ட ரஷீத் அபிஷேக்கிடம் கேட்ச் கொடுத்து தனது டக் அவுட்டாகி தனது விக்கெட்டை இழந்து வந்த வேகத்திலேயே பெவிலியன் நோக்கி நடையைக்கட்டினார். தொடர்ந்து சாம்கரண் பேட்டிங் செய்ய களமிறங்கினார் அவரும் டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டை விளையாடுவது போல 10 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஹர்ஷத் படேல் பந்து வீச்சில் அன்கட் வெர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சாம் கரணைத்தொடர்ந்து, 4-வது வீரராக மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். 17 பந்துகளில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி மட்டுமே விளாசிய ஜடேஜா 17 பந்துகளில் 21 ரன்களை அவுட் ஆனார்.

மறுமுனையில், அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில் 30 ரன்களில் எடுத்த நிலையில், பேட்கம்மின்ஸ் பந்துவீச்சில், இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அறிமுக வீரராக களமிறங்கிய டெவால்ட் ப்ரெவிஸ் தன்னுடைய முதல் போட்டியில் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ஷிவம் தூபே 12 ரன்களில் ஆட்டமிழக்க, தீபக் ஹூடா 22 ரன்களை சேர்த்த நிலையில், அபிஷேக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி அணியை சரிவில் இருந்து மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய சிஎஸ்கே வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், 19.5 ஓவர்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களை மட்டுமே சென்னை அணி சேர்த்தது.

சன்ரைசர்ஸ் அணி சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

155 ரன்கள் இலக்கு

சன்ரைசர்ஸ் அணி 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கியது. கலில் பந்தில் அபிஷேக் டக் அவுட்டாக, ட்ராவிஸ் ஹெட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இஷான்கிஷான் 44 ரன்களை சேர்த்த நிலையில் நூர் அகமது பந்தில் சாம்கரணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கிளாசன் களமிறங்கிய நிலையில், ஜடேஜாவின் பந்துவீச்சில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அணிகெட் வர்மா 19 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில், அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய மெண்டிஸ் மற்றும் நிதிஷ்குமார் ஜோடி அதிரடியாக விளையாடிய நிலையில், மெண்டிஸ் 32 ரன்களிலும், நிதிஷ் 19 ரன்களும் எடுத்த நிலையில், 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

10 வது இடத்தில் சிஎஸ்கே

இந்த போட்டியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் குஜராத் அணியும், அடுத்தடுத்த இடங்களில், டெல்லி, மும்பை அணிகள் உள்ளன. முதல் 4 நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.