தமிழ்நாடு

2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
Red Alert
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை. தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெறாது . இது அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும்.

கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல், நாளை (அக்.23) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன - மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.