சினிமா

"உங்கள் உழைப்பு என்னை ஆச்சரியபடுத்துகிறது"- மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்!

துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன்' படத்தை பார்த்துவிட்டுப் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Rajinikanth and Mari Selvaraj
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பைசன்: காளமாடன்' திரைப்படத்துக்குச் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாகப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், வசூல் ரீதியாகவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நடிகர் ரஜினி பாராட்டு

திரைப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைத் தொலைபேசி வாயிலாகப் பாராட்டிய ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜிடம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், "சூப்பர் மாரி. சூப்பர். பைசன் பார்த்தேன். படத்துக்குப் படம் உங்கள் உழைப்பும், உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி. வாழ்த்துகள்" என்று ரஜினி சார் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

தொடர்ந்து, மாரி செல்வராஜ், "எனது முந்தையப் படங்களான 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' பார்த்துவிட்டு என்னை அழைத்து வாழ்த்தியது போலவே, எனது ஐந்தாவது படமான 'பைசன் (காளமாடன்)' பார்த்துவிட்டு என்னையும் தயாரிப்பாளர் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதாரப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள 'பைசன்' திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாராட்டானது படக்குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.