தமிழ்நாடு

கரூர் விவகாரம்: விசாரணை முடியும் வரை காத்திருங்கள் - விஜய் குறித்துச் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி!

கோவை திமுக பொறுப்பேற்பு விழாவில் பேசிய செந்தில் பாலாஜி, கரூர் விவகாரம் குறித்துப் பதிலளிப்பதைத் தவிர்த்து, விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கரூர் விவகாரம்: விசாரணை முடியும் வரை காத்திருங்கள் - விஜய் குறித்துச் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி!
கரூர் விவகாரம்: விசாரணை முடியும் வரை காத்திருங்கள் - விஜய் குறித்துச் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி!
தி.மு.க. கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளராகப் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள துரைசெந்தமிழ்ச்செல்வன் இன்று முறைப்படிப் பொறுப்பேற்றார். இதையொட்டி, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மற்றும் மண்டலப் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துப் பதிலளித்தார்.

விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும்

கரூர் சம்பவம் குறித்து விரிவாகப் பேச மறுத்த செந்தில் பாலாஜி, அது தொடர்பான கேள்விகளுக்குத் தற்போது பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார். ஏற்கனவே விரிவாகப் பேசிவிட்டேன். விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, விசாரணை முடிந்த பிறகு அதைப் பற்றிப் பேசினால் சரியாக இருக்கும். அது சம்பந்தமான கேள்விகளைத் தற்போதைக்குத் தவிர்க்கலாம். கரூர் விவகாரம் தொடர்பாகத் தற்பொழுது எந்தக் கேள்விகளும் வேண்டாம். விசாரணை முடிந்து அறிக்கை வந்த பிறகு மீண்டும் பேசுவோம்.

புதிய வீடியோக்கள் குறித்து

இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு புதிய வீடியோக்கள் வெளியாகி வருவது குறித்த கேள்விக்கு அவர், எந்தெந்த வீடியோக்கள் வெளியாகிறதோ, அவை அனைத்தும் விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அரசியல் செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

கரூர் சம்பவத்தை வைத்துத் தமிழக அரசு அரசியல் செய்வதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அவர், அரசு சார்பில் ஏற்கெனவே முழு விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகக் கூறினார். விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையில் என்ன வருகிறதோ? அதைப் பார்த்து அது பற்றிப் பேசுவோம்.

இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை ஆராயாமல் கேள்விகள் கேட்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய செந்தில் பாலாஜி, செய்தியாளர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். யாரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை யாரிடம் கேட்கிறோம் என்று செய்தியாளர்கள் நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏன் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தீர்கள்? ஏன் 500 மீட்டருக்கு முன்பாகவே வண்டிக்குள் சென்றுவிட்டீர்கள்? ஏன் 12 மணிக்கு என்று அறிவித்துவிட்டு ஏழு மணிக்கு வந்தீர்கள்? டிசம்பர் மாதம் திட்டமிட்டிருந்த பிரச்சாரம் ஏன் முன் கூட்டியே வந்தது? என்று நீங்கள் அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும் என்று நடிகர் விஜய்யைக் குறி வைத்து அவர் சாடினார்.

இருக்கின்ற சூழலை எடுத்துக் கூறுகின்ற கடமை நமக்கு உள்ளது. என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் எதிர் புறத்திலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா? என்று அவர் தனது பேட்டியை முடித்துக் கொண்டார்.