தமிழ்நாடு

கரூர் விபத்து: வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? நீதிமன்றக் கேள்விக்குப் பின் - விஜய் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வேலாயுதபாளையம் போலீசார் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூர் விபத்து: வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? நீதிமன்றக் கேள்விக்குப் பின் - விஜய் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!
விஜய் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விடுத்த கண்டனங்களைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் பரப்புரை வாகனத்தின் ஓட்டுநர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 47 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், மாவட்டப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, விஜய்யின் பிரச்சார வாகனத்தின் ஓட்டுநர் மீது "மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக" வேலாயுதபாளையம் போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றக் கேள்விக்குப் பின் நடவடிக்கை

இந்தப் பிரச்சாரத்தில் இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், விஜய்யின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தது.

மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டும் போலீசார் கருணை காட்டுவதை ஏற்க முடியாது. விபத்து தொடர்பாகத் தனியாக வழக்குப் பதிவு செய்து, பிரச்சார வாகனத்தை உடனடியாகப் பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?" என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

நீதிமன்றத்தின் இந்தக் கடுமையான கண்டனங்களைத் தொடர்ந்தே, கரூர் வேலாயுதபாளையம் போலீசார் தற்போது ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் விஜய்யின் பரப்புரை வாகனம் பறிமுதல் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதர நீதிமன்ற விவரங்கள்:

சிபிஐ விசாரணை கோரித் தவெக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவை, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தவெக பரப்புரைக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், நீதிபதிகள் விஜய்க்கு நேரடியாகக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.