தமிழ்நாடு

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!
பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், இன்று மாநிலம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, 'எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்', 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்' என முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்துப் பேட்டியளித்த ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, "முதலமைச்சர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வேன், காலிப் பணியிடங்களை நிரப்புவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், நான்கரை ஆண்டுகள் ஆன பிறகும் எங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முறையிட்டுள்ளோம்," என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ஆளும் கட்சிக்கு நேரடி எச்சரிக்கை

இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய மலர்விழி, "நாங்கள் உருவாக்கிய அரசு எங்களைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, எங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைக்கக் கூடாது," என்று ஆவேசமாகக் கூறினார். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வான **'டெட்' (TET) தேர்வை ரத்து செய்ய வேண்டும்** எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினரோ அமைச்சரோ ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, மீண்டும் ஒரு தேர்வு எழுதி வெற்றி பெற்றுதான் பதவியில் அமர முடியும் என்று கூறினால் எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் குழு அமைத்து ஆலோசிப்போம் என்று கூறினால், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தங்களது கூட்டத்தில் ஒரு முடிவெடுப்போம் எனவும் தெரிவித்தார்.

மேலும், "பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் அமல்படுத்தப்படவில்லை என்றால், 2026 சட்டமன்றத் தேர்தல் கேள்விக்குறியாகத்தான் இருக்கும்," என்று அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.