தமிழ்நாடு

மேயர் பிரியாவுக்கு எதிராக ஆபாச வீடியோக்கள்: போலீசில் பரபரப்பு புகார்!

சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களுக்குப் பின் பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தினர் என குற்றச்சாட்டு; காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

மேயர் பிரியாவுக்கு எதிராக ஆபாச வீடியோக்கள்: போலீசில் பரபரப்பு புகார்!
மேயர் பிரியாவுக்கு எதிராக ஆபாச வீடியோக்கள்: போலீசில் பரபரப்பு புகார்!
சென்னை மாநகராட்சியின் மேயராக இருக்கும் பிரியா ராஜனை சமூக வலைதளங்களில் அவதூறாகவும் ஆபாசமாகவும் சித்தரித்து வீடியோக்கள் பரப்பப்படுவதாக, தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் செயலுக்குப் பின் அரசியல் கட்சிகள் இருப்பதாக அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று காலை, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த கி.வீரலட்சுமி, சென்னை மேயர் பிரியா, முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்களை சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரித்து வீடியோக்கள் வெளியிடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சென்னை போன்ற ஒரு பெரிய மாநகராட்சியின் மேயராகப் பணியாற்றி வரும் பிரியாவை சமூக வலைதளங்களில் ஆபாசமாகச் சித்தரித்து வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. மக்கள் மத்தியில் நேரடியாகச் சந்திக்காத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுடன் தவறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட முடியுமா? அவ்வாறு செய்தால், மத்திய அரசு எவ்வாறு நடவடிக்கை எடுக்கும்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், சென்னை மேயர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரைத் தவறாகச் சித்தரிக்கும் வீடியோக்களின் விவரங்கள், அதற்கான ஐடி முகவரிகள் ஆகியவற்றுடன் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அவதூறுப் பிரச்சாரங்களுக்குப் பின், பாஜக, ஆர்எஸ்எஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக வீரலட்சுமி குற்றம்சாட்டினார்.

பல நூறு ஐடி கணக்குகள் இதுபோன்ற ஆபாசப் பதிவுகளைப் பரப்பி வருவதாகவும், அதில் பல ஐடிகள் மிக மோசமான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேயர் பிரியா, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தொடர்ந்து இதுபோன்ற தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

காவல்துறையினர், புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும், இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் வீரலட்சுமி வலியுறுத்தினார்.