அரசியல்

கொள்கை தெரியாத கோமாளியாக விஜய் இருக்கிறார்- பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் சாடல்

திராவிட மாடல் என்பது மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு மாடலாக இருக்கிறது என வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

கொள்கை தெரியாத கோமாளியாக விஜய் இருக்கிறார்- பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் சாடல்
தவெக தலைவர் விஜய் மற்றும் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம்
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் அருகில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கடன் வாங்குவதில் முதல் மாநிலம்

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர் சுமதி, பா.ஜ.க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஆன்மீகவாதி. கடந்த காலங்களில் யாரும் செய்யாத சாதனைகளை செய்து வருகிறார். ஆன்மீக நம்பிக்கை இல்லாமல் கடவுள் மறுப்பு என்று காட்டுமிராண்டி கொள்கை வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தை ஊழல் மிகுந்ததாக, சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு மாநிலமாக, சாராய சாம்ராஜியத்தின் இந்தியாவில் முதன்மை மாநிலமாக, இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக இவர்கள் இருக்கிறார்கள்.

திராவிட மாடல் என்பது மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு மாடலாக இருக்கிறது.தமிழகத்தில் சாராயத்தின் மூலமாக நிறைய கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மது குடிப்பதினால் நிறைய மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். கள்ள சாராயத்தில் இறப்பு நடக்கிறது. கிட்னி திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொள்கை தெரியாத கோமாளி விஜய்

2026 சட்டமன்றத்தேர்தலில் நிச்சயமாக தி.மு.க-வை வீழ்த்துவோம். தேசிய ஜனநாயக கூட்டணி - அ.தி.மு.க கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்பார்.

பாசிச பா.ஜ.க என்று பாரதிய ஜனதா கட்சியை விமர்சிக்கிறார் நடிகர் விஜய். எங்களுடைய அரசியல் எதிரி தி.மு.க என்று சொல்கிறார். அதே வேலையில் கொள்கை எதிரி பா.ஜ.க என்று சொல்கிறார். விஜய்க்கு முதலில் என்ன கொள்கை இருக்கிறது என்று நான் கேட்கிறேன்.

அடுத்த கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் தன் கொள்கை தலைவராக ஏற்று கொண்டிருக்கிறாரே தவிர, தனக்கான கொள்கை எதுவென்று தெரியாமல் கோமாளியாக த.வெ.க தலைவர் விஜய் இருக்கிறார். ஒரு தொண்டனாக இருந்து அவருடைய ரசிகர்கள் எப்படி கூச்சலிடுகிறார்களோ, அப்படி கூச்சல் இடுவதற்கான தலைவர் தானே தவிர, கொள்கை ரீதியாக பேசுவதற்கோ அல்லது தனக்கான சித்தாந்தத்தை மக்களிடத்தில் சொல்வதற்கோ தகுதியற்றவர் விஜய்.

விஜய்க்கு சவால்

மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டது என்று விஜய் சொல்கிறார். இது யாருடைய குரல் திமுகவின் குரலை பிரதிபலிக்கிறார். இந்திய குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணனை வாழ்த்துவதற்கு கூட மனமில்லாத சூழ்நிலையில் தான் தற்பொழுது தி.மு.க இருக்கிறது.

த.வெ.க தலைவர் விஜய் தி.மு.க-வின் ‘B’ Team என்று மற்றவர்கள் சொல்வதைப்போல, நான் சொல்ல மாட்டேன். இன்றைக்கு அது தேவையற்றது. ஆனால் ‘B’ Team-க்கு அளவுகோல் என்னவென்றால் ஒரு கட்சி செய்வது இன்னொரு கட்சி COPY அடித்தால் அதற்கு பெயர் ‘B’ Team. விஜய் COPY அடிக்கிறாரா இல்லையா. அவர் பாரதிய ஜனதா கட்சி குறித்து பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

த.வெ.க தலைவர் விஜய்க்கு நான் பகிரங்க சவால் விடுகிறேன். அவர் சிறந்த தலைவராக இருக்க போகிறார் என்பதை அவர் நிரூபிக்க வேண்டுமென்றால் கொள்கை ரீதியாக பாரதிய ஜனதா கட்சியோடு அவர் விவாதம் செய்ய தயாரா? அல்லது அவருடைய கட்சியின் மூத்த தலைவர்கள் விவாதம் செய்ய தயாரா? பொதுத்தளத்தில் அவர்களை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கமலின் நிலைதான் ஏற்படும்

மேலும் தேவையற்ற முறையில் இளைஞர்களை தேசத்திற்கு எதிராக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் வகையில் த.வெ.க தலைவர் விஜய் பேசுவார் என்றால் அவருடைய எதிர்காலம் பூஜ்ஜியமாக மாறிவிடும். கடந்த காலங்களில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட நிலைதான், வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய்க்கு ஏற்படும்.

பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் வெற்றி பெற வேண்டும் என்று இருந்தால் நடிகர் கமல்ஹாசன் ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் ஜெயிக்கவில்லை.தமிழ் நாட்டில் மாற்றுவக்கு என்று ஒரு 10% சதவீதம் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் 6 முதல் 8 சதவீதம் வாக்குகள் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று இன்றைக்கு கருத்துக்கணிப்புகள் சொல்கிறது. இதுதான் அவருடைய முதல் தேர்தல். இது தான் அவருடைய கடைசி தேர்தலாக இருக்கும். அடுத்து வரக்கூடிய சட்டமன்றத்தேர்தலில் தி.மு.கவிடம் ஒரு எம்.பி சீட்டுக்கு எப்படி நடிகர் கமல் ஹாசன் சென்றாரோ அதேபோன்று தான் விஜய்யும் செல்வார்.

மாபெரும் புரட்சி

மத்திய அரசின் ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களால் பால், அரிசி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பால் மக்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள்.இந்த ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர். ஜி.எஸ்.டி வரி குறைப்பு ஒரு மாபெரும் புரட்சியாக அமைந்துள்ளது. மேலும் பல தொழில்கள் செய்பவர்களுக்கு இந்த ஜி.எஸ்.டி வரி குறைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்” என தெரிவித்தார்.