தமிழ்நாடு

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல்- இறந்தது போன்று வீடியோ எடுத்து நாடகமாடியது அம்பலம்

திருமண நாடகமாடி இரண்டரை கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி குற்றச்சாட்டு

  ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல்- இறந்தது போன்று வீடியோ எடுத்து நாடகமாடியது அம்பலம்
ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் இறந்தது போன்று வீடியோ அனுப்பி மோசடி செய்த பெண்
சென்னையைச் சேர்ந்த ஜூன் சிங் என்பவர் இளநிலை மின்வாரிய பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விவாகரத்து மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமாக தன்னை கேரளாவை சேர்ந்த பெண் திருமணம் செய்து கொண்டு இரண்டரை கோடி ரூபாய் சொத்துக்களை மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.

மேட்ரிமோனியல் மூலம் திருமணம்

கணவனோடு சேர்ந்து கும்பலாக திருமணம் செய்து கொண்டு நாடகமாடி சொத்துக்களை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சொத்துக்களை அபகரித்த பின் தப்பிப்பதற்கு இறந்தது போன்று நாடகமாடி ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ஜீன் சிங் கடந்த 2022ஆம் ஆண்டு விவாகரத்து மேட்ரிமோனியல் மூலமாக ஷ்ரத்தா லெனின் என்ற மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை கேரளாவில் சந்தித்துள்ளார்.

குறிப்பாக பெசன்ட் நகர் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு ஷ்ரத்தா லெனினை மனைவியாக ஏற்றுக்கொண்டு தனது இன்சூரன்ஸ் வைப்பு நிதி உள்ளிட்டவற்றை மனைவியின் பெயரில் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி ஷ்ரத்தா லெனின் கேரளாவிற்கு சென்று வருவதாகவும் குடும்ப நண்பர் ஜோசப் என்பவர் வீட்டில் தங்கி இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். கடைசியாக ஏப்ரல் மாதம் கொச்சியில் இருந்து கொண்டு whatsapp சேட் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இறந்தது போன்று வீடியோ அனுப்பி மிரட்டல்

இந்த நிலையில் தான் ராவ் என்பவர் வழக்கறிஞர் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு முறை பார்த்தவுடன் அழியும் வகையிலான வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாக தெரிவித்துள்ளார். அதில் மனைவி ஷ்ரத்தா லெனின் இறந்துவிட்டதாகவும் அவருக்கான இறுதிச்சடங்கு நடப்பது போன்ற கஃபின் பாக்ஸ் உள்ளிட்டவற்றை காட்டி வீடியோ அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சோபியா என்பவர் தொடர்பு கொண்டு ஷ்ரத்தா தாய் என கூறிக்கொண்டு பேசியதாகவும் , அப்போது தனது மகள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகவும், கணவரின் பெயரை தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளதாகவும் கூறி மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இதை வெளியில் சொல்லாமல் இருக்க 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

சொத்துக்கள் அபகரிப்பு என புகார்

தொடர்ந்து தன்னை ஏமாற்றுவதாக தெரியவந்ததை அடுத்து முதலில் காணாமல் போனதாக கேரளாவில் புகார் அளித்ததாகவும் , அதன் பின்பு ஆட்கொணர்வு மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும் ஜீன் சிங் தெரிவித்துள்ளார். விசாரணையில் தான் ஷ்ரத்தா மற்றும் அவரது குடும்ப நண்பர் என கூறிக்கொண்ட ஜோசப் என்ற லெனின், கணவன் மனைவியாக சேர்ந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான என்னை ஏமாற்றி இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்தது அம்பலமானது.

கேரள உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷ்ரத்தா லெனின் , நட்புடன் மட்டுமே பழகியதாகவும் திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உறவை துண்டிக்க நினைத்தபோது இதுபோன்று மிரட்ட ஆரம்பித்ததால் இறந்தது போன்ற வீடியோ காட்சியை அனுப்பி நாடகம் ஆடியதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து சட்ட ரீதியாக அணுகும்படி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஜின் சிங் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்னை ஏமாற்றிய ஷ்ரத்தா லெனின் மற்றும் அவரது கணவர் லெனின், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.