தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்த நடிகர் விஜய் தற்போது தனது நடிப்பு பயணத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியல் பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘2026 சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு’ என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதை விஜய் உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் விஜய் தனது கட்சி கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, அக்டோபரில் ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ முதல் மாநாடு நடைபெற்றது. இதில், விஜய் பேசியதை ஒரு தரப்பினர் விமர்சித்தும் ஒரு தரப்பினர் வரவேற்றும் இருந்தனர். இதுஒருபுறம் இருக்க தலைவர்கள் பிறந்த நாள், பண்டிகைகள், சமூக அநீதி ஆகியவற்றிற்கு எதிராக விஜய் தனது கட்சி சார்பில் அறிக்கை வெளியிட்டும் வருகிறார்.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளார். இருப்பினும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் ஆளும் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தன் தொண்டர்களை தேர்தல் பணிகளுக்கு தயார்ப்படுத்தும் விதமாக ஜனவரி 4-ஆம் வாரத்திற்குள் மாவட்ட பொறுப்பாளர் நியமனம் செய்யும் பணியை முடிக்க வேண்டும் என பொது செயலாளர் ஆனந்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, மூன்று மாதங்களாக தமிழக வெற்றிக் கழகம் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த மாதத்திற்குள் பொறுப்பாளர் நியமனம் செய்யும் பணியை முடித்தே ஆக வேண்டும் என விஜய் கூறியுள்ளதாகவும், அனைத்து பணிகளும் முடிந்த உடன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.