மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டோவினோ தாமஸ், சமீபத்தில், இயக்குநர் ஜித்தன் லால் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான ’ஏ.ஆர்.எம்’ திரைப்படம் தமிழ், மலையாளம், உட்பட ஆறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நடிகர் டோவினோ தாமஸ், இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இயக்கத்தில் 'IDENTITY' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில், நடிகை த்ரிஷா முதன் முறையாக டோவினோ தாமஸிற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், வினய் ராய், மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராகம் மூவிஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் மூலம் சி.ஜே.ராய் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ‘IDENTITY’ படத்தின் அகில இந்திய விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் வாங்கியுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது.
இந்நிலையில், 'IDENTITY' திரைப்படம் நேற்று (ஜன 2) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படக்குழுவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 'IDENTITY' படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியாகும் மிகச்சிறந்த திரில்லர் படங்களின் வரிசையில் தற்போது 'IDENTITY' படமும் இணைந்துள்ளது. காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் சிறந்த படமாக அமைத்துள்ளது.
படம் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் படத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பிளாக்பஸ்டர் ஹிட்டான 'ஃபாரென்சிக்' படத்திற்குப் பிறகு டோவினோ தாமஸ், இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் கூட்டணி மீண்டும் வெற்றி அடைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'IDENTITY' திரைப்படத்திற்கு முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் 40 காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.