
செங்கோட்டையன் நிகழ்ச்சியில் அடிதடி..! பறந்த நாற்காலிகள்... பதறிய மாஜி..! பின்னணியில் எடப்பாடியாரா..?
அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், செங்கோட்டையனின் கலகக் குரல் கழகத்தையே கதிகலங்க வைத்தது. தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட உச்சரிக்காமல் இருந்துவரும் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணியுடன் கைக்கோர்த்து எடப்பாடிக்கு எதிராக டெல்லி தலைமையின் பேச்சைக் கேட்டு ஆடிவருவதாக எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செங்கோட்டையனின் ஆக்ஷனால் எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆனாலும், நேரடியாக செங்கோட்டையனை சீண்டாமல் இருந்து வந்தார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இந்த நிலையில் தற்போது பாஜகவுடனான கூட்டணிக்கு எடப்பாடி கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனக்கு எதிரான கலகக் குரலை எழுப்பியவர்களின் கணக்குகளை வட்டியும் முதலுமாக தீர்க்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில், தற்போது எடப்பாடியார் தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். அதாவது, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடியால் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகியின் ஆதரவாளர், திட்டமிட்டு இந்த கூட்டத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியதாக செங்கோட்டையன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் சமீபத்தில் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், கூட்டத்தில் செங்கோட்டையன் பேசி முடிக்கும் போது அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி பிரவீன் என்பவர் எழுந்து, அதிமுகவின் கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும், நிர்வாகிகள் எந்த தகவலும் தெரிவிப்பதில்லை எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட, அந்த நிர்வாகியை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் சமரசம் செய்ய முயற்சித்தார்.
அப்போது அங்கிருந்த சக நிர்வாகிகள் புகார் தெரிவித்த பிரவீனை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அவரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தனர். மேலும் நிர்வாகிகள் அவரை சரமாரியாக தாக்கியதோடு, நாற்காலிகளை தூக்கி எரிந்து மண்டபமே கலவர கூடாரமாக காட்சியளித்தது.
ஒருவழியாக பிரச்னையை முடித்து கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், பிரச்னை செய்த நபர் கட்சியில் அடிப்படை உறுப்பினரே இல்லை என்றும், அந்தியூரை சேர்ந்த மாநில நிர்வாகி இ.எம்.ஆர் ராஜா பிரச்னையை ஏற்படுத்துவதற்காகவே அவரை திட்டமிட்டு அனுப்பி வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு இ.எம்.ஆர்.ராஜா தான் காரணம் என்றும், பொதுமக்களிடம் அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என அவர் சொன்னதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் பகீர் கிளப்பினார்.
செங்கோட்டையனால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் EMR ராஜா, சமீபத்தில் செங்கோட்டையன் பரிந்துரை இல்லாமலும் அவருக்கு தெரியாமலும் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியால் நியமனம் செய்யப்பட்டவர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அவரது நியமனத்திற்கு பிறகு தான் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடே ஏற்பட்டதாகவும், தற்போது அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இது பகிரங்கமாக வெடித்திருப்பதாகவும் ஈரோடு ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர்.