அரசியல்

ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ.. மதிமுக கூட்டத்தில் அறிவிப்பு

மதிமுக முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

 ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ.. மதிமுக கூட்டத்தில் அறிவிப்பு
ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ.. மதிமுக கூட்டத்தில் அறிவிப்பு
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மதிமுகவின் தலைமைக்கழகச் செயலாளராகப் பதவியேற்றார் துரை வைகோ, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்த நிலையில் அப்பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதுத்தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்ட துரை வைகோ, ”கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

சமீப நாட்களாகவே மல்லை சத்யா மற்றும் துரை வைகோ தரப்பினர் இடையே கருத்து மோதல்கள் நடைப்பெற்று வந்த நிலையில், மதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. துணை பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யா பெயரை கட்சி நிகழ்ச்சிகளின் பேனர் போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என்று துரை வைகோ தரப்பு கட்டுப்பாடுகள் விதித்தது. திருச்சியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என தீர்மானம் போட்டு தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஏப்ரல் 12 -ஆம் தேதி மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுக்குழு கூட்டம் தாயகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வைகோவின் சாதியை சேர்ந்தவர்களுக்கே தொழிற்சங்கத்தில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போது ஒரு நிர்வாகி மல்லை சத்யா பெயரை குறிப்பிடாமல் ’அவரை நான் வெட்டிவிட்டு சிறைக்குப் போய்விடுகிறேன்' என்று ஆவேசமாகப் பேசினார்.

அப்போது, துரை வைகோவும் அந்த நிர்வாகி பேசியதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆனால் வைகோவோ, மல்லை சத்யா எனது உயிரைக் காப்பாற்றியவர். ஆகவே அவரைப் பற்றி யாரும் தவறாக பேசக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தார். உடனே துரை வைகோ. 'முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு கோபமாக கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே துரை வைகோவின் ஆதரவாளர்கள் பல மாவட்டங்களில் கூட்டத்தைக் கூட்டி மல்லை சத்யாவை நீக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றினர்.

துரை வைகோ அறிவிப்பு

இந்த நிலையில், இன்று மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் வைகோ தலைமையில் கூடியது. இதில், மதிமுக முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மேலும் நிர்வாகிகளின் வற்புறுத்தலை ஏற்று ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.