அரசியல்

காவலாளி அஜித் குமார் மரணம்: தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவலாளி அஜித் குமார் மரணம்: தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
TVK Announced protest
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமார் என்பவர் 10 பவுன் நகை திருடியதாக பக்தர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதால் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழக அரசியலால் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கானது நேற்றைய தினம் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த அஜித்குமாபிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற உடற்கூறு ஆய்வின் அறிக்கையானது வெளியானது. அதில் அஜித் குமாரரின் உடலில் 18 இடங்களில் வெளிப்புற காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரல்வளையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உள்உறுப்புகள் சேதம் அடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய 5 காவலர்கள் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களை 15 நாள் நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சிவகங்கை போலீஸ் எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்பியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக போராட்டம் அறிவிப்பு:

இந்த நிலையில், கோயில் காவலாளி அஜித் குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வரும் 3 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்,கட்சியின் தலைவர் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வரும் 3 ஆம் தேதி அன்று காலை 10:00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.