இந்தியா

‘கொலை செய்வது எப்படி?’ யூடியூப் வீடியோவைப் பார்த்து கணவரைக் கொன்ற மனைவி!

தெலுங்கானாவில் ஒரு பெண் யூடியூப் வீடியோவை பார்த்து, ஆண் நண்பரின் உதவியுடன் தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘கொலை செய்வது எப்படி?’ யூடியூப் வீடியோவைப் பார்த்து கணவரைக் கொன்ற மனைவி!
Wife kills husband after watching YouTube video
யூடியூப் வீடியோவில் கற்றுக்கொண்ட கொடூரமான முறையைப் பயன்படுத்தி, தனது கணவரைக் கொலை செய்த வழக்கில், ஒரு பெண் உட்பட மூன்று பேரை தெலங்கானா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை பின்னணி

ராமாதேவி என்ற பெண், தனது கணவர் சம்பத்தைக் கொல்வதற்கு ஒரு விசித்திரமான முறையைத் தேர்வு செய்துள்ளார். யூடியூபில், "காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி ஒருவரைக் கொல்வது எப்படி?" என்ற வீடியோவைப் பார்த்து, தனது கள்ளக்காதலனான கார்ரே ராஜய்யாவிடம் இந்த யோசனையைக் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று இரவு, சம்பத் மதுபோதையில் இருந்தபோது, ராஜய்யாவும் அவரது நண்பரான சீனிவாஸ் என்பவரும் அவரை பம்மக்கல் மேம்பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மயக்கமடைந்த சம்பத்தின் காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றியுள்ளனர். இதில் சம்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல்துறையின் விசாரணை

மறுநாள், ராமாதேவி தனது கணவரைக் காணவில்லை என்று புகார் அளித்து காவல்துறையினரை திசைதிருப்ப முயன்றுள்ளார். ஆனால், கடந்த 1-ஆம் தேதி சம்பத்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, பிரேதப் பரிசோதனைக்கு ராமாதேவியும் ராஜய்யாவும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது, காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ராமாதேவி மற்றும் ராஜய்யாவின் செல்போன் அழைப்புப் பதிவுகள், இருப்பிடத் தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மூவரும் சேர்ந்து சம்பத்தைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, மூன்று பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.