இந்தியா

திருவனந்தபுரம் வெற்றி கேரள அரசியலில் திருப்புமுனை- பிரதமர் மோடி பெருமிதம்!

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

திருவனந்தபுரம் வெற்றி கேரள அரசியலில் திருப்புமுனை- பிரதமர் மோடி பெருமிதம்!
PM Modi
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியைப் பிரதமர் நரேந்திர மோடி, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை என வர்ணித்துள்ளதுடன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் எக்ஸ் தளப் பதிவு

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். கேரள மக்கள் யுடிஎப் மற்றும் எல்டிஎப் கட்சிகளால் சலிப்படைந்துவிட்டனர். நல்லாட்சியை வழங்கி, அனைவருக்கும் வாய்ப்புகளுடன் கூடிய ஒரு விக்சித் கேரளத்தை உருவாக்கக்கூடிய ஒரே வழி என்டிஏ தான் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கேரளாவின் வளர்ச்சியை முழுமையாக அடைவது பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். பாஜக இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பாடுபடும்.

பாஜக தொண்டர்களுக்கு நன்றி

திருவனந்தபுரம் மாநகராட்சியில் இந்த அற்புதமான வெற்றிக்கு வித்திட்ட, மக்களிடையே அயராது உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் எனது நன்றிகள். இன்றைய இந்த வெற்றி நிஜமாகியதற்கு காரணமான, பல தலைமுறை தொண்டர்களின் பணிகளையும் தியாகங்களையும் நினைவுகூர வேண்டிய நாள் இது. எங்கள் தொண்டர்களே எங்கள் பலம், அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.