இந்தியா

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு!

வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு!
Census 2027
பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2027-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பாக நடைபெறவுள்ளது.

கணக்கெடுப்பு விவரங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறுகையில், இந்தக் கணக்கெடுப்பிற்காக மத்திய அமைச்சரவை ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது. இது 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும், இதனைச் செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படவிருக்கிறது என்றும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாகப் புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு முழு விவரங்கள் வெளியாகவிருக்கின்றன என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

முக்கியத்துவம் மற்றும் பின்னணி

2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கப்போகிறது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப்பிறகு இந்தியாவின் மொத்த மக்கள்தொகை என்ன என்பது தெரிய வரும். மேலும், இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாகவும் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.