கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், விமானப் பயிற்சி பட்டப்படிப்பு படித்து வந்த 19 வயது இளம் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் அவரை கல்லால் அடித்துக் கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபரம் மற்றும் புகார்
எர்ணாகுளம் மாவட்டம் மலையாட்டூர் துருத்திபரம்பிலைச் சேர்ந்த ஷைஜு மற்றும் ஷினியின் மகள் சித்ரபிரியா (19), பெங்களூருவில் விமானப் பயிற்சி பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் சொந்த ஊருக்குக் கோவில் திருவிழாவிற்காக வந்துள்ளார். சனிக்கிழமை மாலை சித்ரா பிரியா வீட்டில் கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் திரும்பி வராததால், அவரது குடும்பத்தினர் காலடி போலீசில் புகார் அளித்தனர்.
உடல் மீட்பும் விசாரணையும்
போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சித்ரா பிரியாவின் காதலன் ஆலன் அழைக்கப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில், நேற்று மாலை மலையாட்டூர் நட்சத்திர ஏரிக்கு அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் சித்ரபிரியாவின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் தலையில் அடிபட்டிருப்பது தெரியவந்தது. அவர் உடலில் காயங்கள் இருந்ததை அடுத்து, அது கொலை என்பதைப் போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும், உடலின் அருகில் ரத்தக்கரையுடன் கல்லும் கிடந்துள்ளது.
காதலன் கைது மற்றும் வாக்குமூலம்
சித்ரபிரியாவும் அவளுடைய ஆண் நண்பர் ஆலனும் மலையாட்டூர் சந்திப்பு வழியாக பைக்கில் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் கிடைத்ததை அடுத்து, ஆலன் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆலன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் ஆலனுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் சித்ரப்ரியா தனது தொலைபேசி அழைப்பை எடுக்காததால் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் ஆலன் கூறினான். பெங்களூருவில் சித்ரப்ரியா படித்து வந்த கல்லூரியில் வேறு ஒருவருடன் சித்ரப்ரியாவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்தே சித்ரபிரியாவை கல்லால் அடித்தே கொலையைச் செய்ததாக ஆலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. கொலை நடந்த போது தான் குடிபோதையில் இந்தக் கொலையைச் செய்ததாக ஆலன் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
LIVE 24 X 7









