இந்தியா

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாக இருக்காது.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து!

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாக இருக்காது.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து!
UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாக இருக்காது.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து!
"UPI பரிவர்த்தனைகள் எப்போதும் இலவசமாக இருக்காது, அதற்கான செலவை யாராவது ஒருவர் ஏற்கத்தான் வேண்டும்" என இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து, இலவச UPI பரிவர்த்தனைகளின் எதிர்காலம்குறித்து முக்கிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் மல்ஹோத்ரா, UPI பரிவர்த்தனைகள் தொடர்பான செலவுகள்குறித்து முக்கிய விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், நான் ஒருபோதும் UPI பரிவர்த்தனை இலவசமாகவே இருக்கும் என்று கூறவில்லை. அதற்குச் சில செலவுகள் உள்ளன, அதனை யாராவது ஒருவர் ஏற்க வேண்டும்" என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

தற்போது UPI சேவைகளை இலவசமாக வைத்திருக்க, அரசு வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கி வருகிறது. இது குறுகியகாலத்திற்கு சாத்தியமானதாக இருக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு இந்த முறை நீடிப்பது கடினம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

யார் செலுத்துவார்கள் என்பது முக்கியமில்லை: யார் இந்தச் செலவைச் செலுத்துகிறார்கள் என்பது முக்கியம், ஆனால் அதைவிட, ஒருவராவது இந்தச் செலவை ஏற்க வேண்டும் என்பது மிக முக்கியம், என அவர் அழுத்திச் சொன்னார். இதன் மூலம், UPI அமைப்பின் நிலைத்தன்மைக்கு நிதி ஆதரவு அவசியம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தியாவில் UPI பரிவர்த்தனைகள் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. ஜூன் 2025-ல் மட்டும் ₹24.04 லட்சம் கோடி மதிப்புள்ள 18.4 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்த மிகப்பெரிய அளவிலான பரிவர்த்தனைகளைக் கையாள, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குச் சேவைக்கான செலவுகள் ஏற்படுகின்றன.

தற்போது, பயனர்களுக்கோ அல்லது சிறு வணிகர்களுக்கோ இந்தச் சேவைக்கு நேரடிக் கட்டணம் இல்லை. இருப்பினும், சஞ்சய் மல்ஹோத்ராவின் கருத்து, எதிர்காலத்தில் UPI பரிவர்த்தனைகளுக்கான நிதி ஆதாரங்கள் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்பதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.

கட்டணங்கள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?

ரிசர்வ் வங்கியின் இந்த விளக்கத்திற்குப் பிறகு, UPI-க்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால், நிதி அமைச்சகம் இதற்கு முன், UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை என்று உறுதிப்படுத்தியது. மேலும், மல்ஹோத்ராவின் கருத்துகள் பயனாளிகள்மீது நேரடியாகக் கட்டணம் விதிக்கப்படும் என்று கூறவில்லை, மாறாக இந்தச் செலவை யார் ஏற்பார்கள் என்பதைப் பற்றியே அதிகம் பேசுகின்றன.

எனினும், சில வங்கிகள் தற்போது பேமென்ட் அக்ரிகேட்டர்களிடம் (Payment Aggregators) UPI பரிவர்த்தனைகளுக்கான செயலாக்கக் கட்டணங்களை (Processing Fee) வசூலிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, எதிர்காலத்தில் UPI சேவையின் நிதி மாதிரி மாறக்கூடும் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

UPI சேவைகள் அனைவருக்கும் இலவசமாக இருப்பதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதில் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த அமைப்பைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கான செலவுகளை யார் செலுத்துவார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.