இந்தியா

சுங்கச்சாவடி கட்டணங்களுக்கு 4 வாரங்கள் தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

சுங்கச்சாவடிகளில் நான்கு வாரங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்க தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடி கட்டணங்களுக்கு 4 வாரங்கள் தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!
சுங்கச்சாவடி கட்டணங்களுக்கு 4 வாரங்கள் தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எடப்பள்ளி - திருச்சூர் NH544 தேசிய நெடுஞ்சாலையில், தொடர்ச்சியான போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலையின் மோசமான நிலை காரணமாக, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக, கேரள உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வையாற்றிலக்கரை சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்க நான்கு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் ஏ. முஹம்மது முஸ்தாக் மற்றும் ஹரிஷங்கர் வி. மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. திருச்சூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மற்றும் சமூக சேவகர் சாக்ஷி ஜே. கோடன் தாக்கல் செய்த மற்றொரு மனுவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றம், "குறைந்தபட்சம் பிப்ரவரி 2025 முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், எழுப்பப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வதில் ஆணையம் அலட்சியம் காட்டியுள்ளது. இந்தப் பிரச்சினை பலமுறை கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிறகும், மத்திய அரசிடம் தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று தனது கவலையை வெளிப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வரை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில தலைமைச் செயலாளர் மற்றும் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.