இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் ரயில் விபத்து: தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் ரயில் விபத்து: தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் பலி!
Train accident in Uttar Pradesh
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் உள்ள சுனார் ரயில் நிலையத்தில் இன்று காலை, ரயிலில் இருந்து தவறுதலாக எதிர்ப்புறம் இறங்கி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் மீது அதிவேக ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்தது எப்படி?

சோபன்-பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9:30 மணியளவில் சுனார் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் வந்து நின்றது. ரயிலில் இருந்து இறங்கிய சில பயணிகள், நடைமேடை வழியாகச் செல்லாமல், தண்டவாளத்தைக் கடந்து மறுபுறம் செல்ல முயன்றனர்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, முக்கியப் பாதையில் அதிவேகமாகக் கல்கா-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. அந்த ரயில் எதிர்பாராத விதமாகப் பயணிகள் மீது மோதியதில், நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ரயில்வே நிர்வாகம் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நடைமேடைக்கு அருகில் பாதசாரிகள் கடந்து செல்ல மேம்பாலம் இருந்தபோதிலும், பயணிகள் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதே விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்

இந்த விபத்து குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

விபத்தைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியதால், பெரிய அளவிலான போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகளும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.