இந்தியா

'இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதுதான்'- பிரதமர் மோடி பேச்சு!

"இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதுதான்'- பிரதமர் மோடி பேச்சு!
PM Modi
குஜராத்தின் பவநகர் நகருக்கு பிரதமர் மோடி இன்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைக்கப் புறப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து அவர் வாகனப் பேரணியாகச் சென்றபோது, தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரூ.34,200 கோடி வளர்ச்சிப் பணிகள்

இதன்பின்னர், 'சமுத்ரோ சே சம்ரிதி' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர், ரூ.34,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், சில திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த ஆண்டு ஜிஎஸ்டி குறைப்பால் சந்தைகள் அதிக வளர்ச்சியைச் சந்திக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே ஒரு மருந்துதான் உள்ளது என்று தெரிவித்த பிரதமர், அது தன்னம்பிக்கை தான் என்றார். வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் என்றும், காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

'துறைமுகங்கள் முதுகெலும்பாக உள்ளன'

தொடர்ந்து பேசிய அவர், உலகம் முழுவதும் பொருட்களை அனுப்ப வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா ஆண்டுதோறும் ரூ.6 லட்சம் கோடி செலுத்துகிறது என்றும், இந்தத் தொகை நமது பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்குச் சமம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெரிய கப்பல்களை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் கடல்சார் துறையை வலுப்படுத்த அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளதாகக் கூறிய பிரதமர், உலகளாவிய கடல்சார் சக்தியாக இந்தியா எழுச்சி பெற, நமது துறைமுகங்கள் முதுகெலும்பாக உள்ளன என்றார். ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்ட அவர், பெரிய கப்பல்கள் உருவாக்கப்படும் என்றும் தேசத்திற்கு உறுதியளித்தார்.

இந்தியாவின் எதிரி

மேலும் அவர், "உலகில் நமக்கு பெரிய எதிரி யாரும் கிடையாது; நாம் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் நம்முடைய பெரிய எதிரி. இந்தியாவின் இந்த எதிரியை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.