டெல்லி, மகாராஷ்டிரா, உத்தர ப்பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் நேற்று இரவு இடி, மின்னலுடன் நான்கு மணிநேரத்திற்கு கனமழை கொட்டித் தீர்த்தது.
கொட்டித்தீர்த்த கனமழையால் பாதிப்பு
பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், பல்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாலையில் இடுப்பளவுக்கு வெள்ளம் ஓடியதால், வாகனங்கள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு இடங்கள் இருளில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை மாவட்ட நிர்வாகங்கள் அருகாமையில் இருந்த பள்ளிகளில் தங்க வைத்தது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இந்த திடீர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அம்மாநில அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.