ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய மைதாங்களில் நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரின் 19வது லீக் போட்டி நேற்று ஐதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்டர்நேஷ்னல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
பேட்டிங்கில் சொதப்பிய சன்ரைசர்ஸ்
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 8 ரன்களிலும், அபிஷேக் சர்மா 18 ரன்களிலும் முகமது சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் 17 ரன்களில் ப்ரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய நிதிஷ் ரெட்டி - கிளாசென் இணை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. அடுத்து களமிறங்கிய அனிகிட் வர்மா 18 ரன்னிலும், மெண்டிஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, பேட் கம்மின்ஸ் 22 ரன்களுடன் முகமது ஷமி 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பவுலிங்கில் சிராஜ் ஆதிக்கம்
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் அடித்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
153 ரன்கள் இலக்கு
குஜராத் டைட்டன்ஸ் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. குஜராத் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் வந்த வேகத்திலேயெ டக் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் இருவரும் அதிரடியாக விளையாடினர். சுப்மன் கில் 61 ரன்களுடனும், ஷெர்பேன் ரூதர்போர்டு 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல், 16.4 ஓவர்கள் முடிவில் 153 ரன்களை சேர்த்தனர். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025
SRH-ஐ 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி GT அபார வெற்றி!
ஐதரபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.