Waterlogging : விடாது வெளுக்கும் கன மழை.. வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்.. ஸ்தம்பித்த நகரம்

Waterlogging in Bengaluru : விடாது கொட்டித்தீர்த்த கனமழையால் பெங்களூர் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பெங்களூர் நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்துள்ளது.

Aug 12, 2024 - 13:05
Aug 13, 2024 - 09:36
 0
Waterlogging : விடாது வெளுக்கும் கன மழை.. வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்.. ஸ்தம்பித்த நகரம்
heavy rain Bengaluru

Waterlogging in Bengaluru : கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் பெங்களூர் நகரமே கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கியது. கடந்த 2 ஆண்டுகளாக எதிர்கொள்ளாத வறட்சியில் சிக்கியது கர்நாடகா. நடப்பாண்டு பருவமழை நல்ல முறையில் பெய்து வருகிறது.தலைநகர் பெங்களூரில் இன்று அதிகாலையில் பலத்த மழை கொட்டியது.

பெங்களூரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலை 6.30 மணிவரையிலான நிலவரப்படி, 7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் கர்நாடகா வெதர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பெங்களூர் நகரில் அதிகாலை 2:30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.. 3- 4 மணிநேரம் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெளிவட்ட சாலை மற்றும் ஒரு சில சுரங்கங்கள் உட்பட நகரின் சில பகுதிகளில் உள்ள சாலைகளில் நீர் தேங்கியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

விடாது கொட்டித்தீர்த்த கனமழையால்(Heavy Rain in Bengaluru) பெங்களூர் நகரத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அலுவலகம், பள்ளிகளுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. பல பகுதிகளிலும் நத்தை போல வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் பெங்களூர் நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்தது. 

நாகவரா சந்திப்பு மற்றும் ஹெப்பால் இடையே வெளிவட்ட சாலை , ஹெப்பால் மேம்பாலம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சி சிட்டி சாலையில் வீரசந்திரா உயர்த்தப்பட்ட சாலை, மாரத்தஹள்ளி, கார்த்திக் நகர், மற்றும் கல்யாண் நகர், புட்டனஹள்ளி, வர்தூர் கோடி மற்றும் சக்ரா மருத்துவமனையிலிருந்து பெல்லந்தூர் வரையிலான வெளிவட்ட சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் பெங்களூர் நகர்ப்புறம்(Bengaluru City) மட்டுமின்றி பெங்களூர் ரூரல், மைசூர், மாண்டியா மற்றும் கோலார் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடி மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் அங்கு மழை மேலும் தொடரும் என்றே வானிலை மையம் கணித்துள்ளது. ஒருநாள் மழைக்கே பெங்களூர் நகரம் தண்ணீரில் தத்தளிப்பதாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow